பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை (ஜூலை. 07) மாலை ஆறு மணிக்கு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த டீசர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது.முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷாவின் புகைப்படமும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை  பெற்றது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் கார்த்தி, இளவரசி, உங்களது லைவ் லொகேஷனை அனுப்புங்கள்.உங்கள் அண்ணனின் ஓலையை கொடுக்க வேண்டும் என கிண்டலாக பதிவிட்டார். அதற்கு பதில் அளித்துள்ள குந்தவை த்ரிஷா, ''மன்னித்துக்கொள்ளுங்கள். அரண்மனையில் ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட்டான நபருக்கு அனுமதி இல்லை'' என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

முன்னதாக டீசர் வெளியீட்டையே பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் கதைக்களமான தஞ்சாவூரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.