கடந்த 2018-ம் ஆண்டு தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் பட்டியலின மக்களின் மீது இந்த சமூகம் நடத்தும் அநீதிகளை எடுத்துரைக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தை  இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின மூலம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் கதிரின் அப்பாவாக நடித்து புகழ் பெற்றவர் தங்கராஜ்.


நாட்டுப்புற கலைஞரான இவர், இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அவரை பெண் என நினைத்து சிலர் தூக்கிச்சென்றதாக துயரமான கதையை கூறியுள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்படத்திலும் அதேபோல அவர் தூக்கிச்செல்லப்பட்டதாக பரியனின் அம்மா கூறுவார். அதேபோல இவரது வாழ்விலும் நடந்ததாக குறிப்பிட்டு பல உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களை குறிப்பிட்டார்.



அவர் ஒரு ஊர் திருவிழாவில் வேஷம் கட்டி ஆடிக்கொண்டிருக்கையில் சிலர் அவரை தூக்கிக்கொண்டு வெகு தூரம் சென்றுள்ளனர். ஒரு முள்ளுக்காட்டிற்குள் வைத்து அவரிடம் மிகவும் அசிங்கமான வார்த்தைகளை பேசி உள்ளனர். அவற்றையெல்லாம் கேட்டு மனம் நொந்த அவர், மனதை தேற்றிக்கொண்டு மானத்தை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அவர் காலில் பெரிய சலங்கைகள் கட்டியிருந்ததால், அதனை தூக்கிக்கொண்டு ஓட முடியாது என்று முடிவு செய்து, தூக்கிச்சென்றவர்களிடம் நான் இதை எல்லாம் முதலில் கழற்றி வைக்கிறேன், பிறகு என்னிடம் வந்து பேசுங்கள் இப்போது தள்ளி நில்லுங்கள் என்று கூறியுள்ளார். அதனை கழற்றிய உடன், ஒரே ஓட்டமாக மூச்சு வாங்க ஓடி திருவிழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அங்கு வந்து செய்தியை சொன்னதும், உங்கள் ஊருக்கு இனிமேல் கூத்து கட்ட வரமாட்டோம் என்று கூறியதாக கூறினார்.


பின்னர் ஊர்மக்கள் ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு தூக்கி சென்றவர்களை தேடி சென்றபோது, அந்த இடத்தில் ஒரே ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். அவரை அடித்து இழுத்துசென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு அவரை போலீஸ்காரர்கள் அடித்து கேட்டபோது மீதி மூன்று பேரையும் பிடித்து தண்டனை கொடுத்தார்கள் என்று கூறினார்.


அதன் பின்னர் இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்தும் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்தும் பேசுகையில்,"நிர்வாணமாக ஓடும் காட்சி எடுக்கும்போது, என் பெண் பிள்ளையை போன்று 200, 300 பிள்ளைகள் நிற்கிறார்கள். நான் காற்றில் சட்டை பறந்துவிடாமல் இருக்க கீழே பிடித்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினேன். ஆனால் அதை மாரி செல்வராஜ் ஒன்பது முறை எடுத்தார். நான் கேமராவை பார்த்துவிட்டதால் மீண்டும் எடுத்தார். ஒரு காட்சியில் வசனம் மறந்ததால் என்னை கன்னத்தில் அறைந்துவிட்டார். பின்னர் நான் அழத்தொடங்கிவிட்டேன், அழுதுகொண்டு, 'பாவி, நடிக்க கூட்டிட்டு வந்தியா, என்னை கொல்ல கூட்டிட்டு வந்தியா' என்றேன். உடனே, என் அருகில் வந்த அவர், 'நீங்க ஊர் ஊரா போயி நடிச்சா அந்த ஊர்ல மட்டும்தான் மதிப்பு, இந்த படத்துல நடிச்சா உலகம் பூரா உங்க புகழ் போயி சேரும்' என்று கூறினார். எல்லோரும் கேட்பார்கள் அந்த படத்தில் நடித்தீர்களே மாரி செல்வராஜ் எவ்வளவு சம்பளம் கொடுத்தாரு, ஒரு பெரிய அமவுண்டு கொடுத்திருப்பாரே என்றார்கள். ஆனால், அவர் காசு கொடுப்பது விஷயம் இல்லை, அதனால் எனக்கு கிடைத்த புகழ்தான் முக்கியம். அதன் பிறகு என்னை ஒரு திரைப்படத்தில் நடிக்க கூப்பிட்டார்கள். நான் படம் பெயர் என்ன என்று கேட்டேன். நான் பிஸியா இருக்கேன்னு சொன்னாங்க. எனக்கு கோவம் வந்துடுச்சு. நான் போனை கட் செய்துவிட்டேன்.


பிறகு ஃபோன் செய்து மாரி செல்வராஜ் சொன்ன மாதிரியே ரொம்ப கோபக்கரரா இருக்கீங்களே, படம் பேரு 'நாங்க ரொம்ப பிஸி'ன்னு சொன்னேன்னு சொன்னார். அப்புறம் படத்துக்கு ஒரே ஒரு நாள் ஷூட்டிங் போனேன், சம்பளம் 1000 ரூபா கொடுத்தார், போன் பண்ணி கோவமா பேசிட்டேன். அப்புறம் காசு போட்டு விட்றேன்னு சொன்னாரு” என்றார்