ஆண்டவனுக்கு யார்மேலயாவது ரொம்ப கோவம் வந்துட்டா, இந்தியாவுல அரசியல்வாதி ஆக்கிடுவான் என்று நடிகர் ரஜினிகாந்த் 1995ல் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


நடிகர் ரஜினிகாந்த் அன்றாடம் 4 ஷிஃப்டில் படம் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போதும் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று பேச்சுகள் பரபரப்பாக இருந்த காலகட்டம். பாட்ஷா, முத்து என பல வெற்றிப் படங்களைக் கொடுத்த காலகட்டம் அது. அப்போது ரஜினியை வைத்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு ஸ்பெஷல் ஷோவை நடத்தினார்.



அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ஆண்டவனுக்கு யாரையாவது தண்டிக்க வேண்டும் என்று தோன்றினால் அவரை ஏழையாகப் படைத்து அவருக்கு நிறைய பெண் குழந்தைகள் கொடுத்துவிடுவார்.  இன்னும் கோபம் என்றால் பணம், பெயர், புகழ் கொடுத்து அப்படியே விட்டு விடுவார். அதே ஆண்டவனுக்குரொம்ப கோவம் என்றால் இந்தியாவில் அரசியல்வாதி ஆக்கிவிடுவார் என்று பேசியிருப்பார். அந்தப் பேச்சு இப்போது வைரலாகி விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. 1995களில் ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு தாராளமாக பேட்டியளித்த காலமும் கூட.


அவர் ரசிகர்களின் கேள்வி பதிலாக அளித்தப் பேட்டியிலும் அரசியல் பற்றி கருத்து கூறியிருப்பார். ஆன்மீகம், அரசியல் என்ற இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருப்பார். அதில், ஆன்மீகத்தையும் அரசியலையும் ஒப்பிடவே முடியாது. ஏனெனில் இரண்டுமே எதிரும் புதிருமானது. பாம்பும் கீரியும் போன்றது என்று கூறியிருப்பார். அதேபோல் இப்போதைய அரசியல்வாதிகளிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ற கேள்விக்கு, இன்றைய அரசியல்வாதிகள் வார்த்தைப் போரில் ஈடுபடுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் சாடிக் கொள்கின்றனர். என்ன எய்ய வேண்டுமோ அதை விடுத்து வார்த்தைப் போரில் ஈடுபடுகின்றனர் என்றார்.


ரஜினி வைத்த முற்றுப்புள்ளி


1995-ம் ஆண்டு வரையில், சினிமாவில் மட்டுமே அரசியல் பேசிய ரஜினி, முதன்முறையாக 1996-ல் வெளிப்படையாகவே அரசியல் பேசினார். அந்த ஆண்டில், ஜெயலலிதாவை எதிர்த்துப் பல கருத்துகளை முன்வைத்தார் ரஜினி. ``ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று அவர் சொன்ன கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் இப்போ வருவார் அப்போ வருவார் என்று பேசப்பட்டுக் கொண்டே இருந்தது. 2017 டிசம்பர் 31 ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.


இதனால் தமிழக அரசியல் முதல் இந்திய அரசியல் வரை ரஜினி சொன்ன ஆன்மீக அரசியலைத் தேடத் தொடங்கியது. ஆனால் 2021ல் நான் அரசியலுக்கு இனி ஒருபோதும் வரப்போவதில்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். அவர் என்னதான் முடித்துவைத்தாலும் ரஜினி அரசியல் பேச்சுக்களை ரசிகர்கள் இப்போதும் வைரலாக்கிக் கொண்டுதன இருக்கிறார்கள்.