திருச்சி சாதனாவின் பயணங்கள் என தனி புத்தகம் எழுதினாலும், அத்தனை கண்டண்ட் கிடைக்கும். அந்த அளவிற்கு செல்லும் இடமெல்லாம் சம்பவம் செய்வதில், சாதனாவிற்கு நிகற் சாதனாவே. ஊரே வெள்ளக்காடாய் நீரில் நீந்திக் கொண்டிருக்கிறது. என்ன செய்கிறார் சாதனா... என அவரது யூடியூப் பக்கம் போய் பார்த்தால், அவரும் நீந்திக் கொண்டிருக்கிறார். 




வெள்ளத்தில் அல்ல... எப்போதும் தழும்பும் கடலில். அதுவும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல். பாவங்கள் தீர்க்க பக்தர்கள் படையெடுக்கும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலுக்கு விஜயம் செய்தார் சாதனா. எங்கு போனாலும், அங்குள்ள கதாபாத்திரமாகவே மாறும் சாதனா, இந்த முறை என்ன செய்யப்  போகிறார் என்கிற எதிர்பார்ப்பு, உங்களை போலவே எனக்கும் இருந்தது. 


துவக்கம் பக்திகரமாக இருந்தது. ஒரு கோயிலில் வழிபாடு நடத்தி முடித்தவர், முடிந்த கையோடு அக்னி தீர்த்த கடலில் இறங்கினார். அவ்வளவு தான் அதன் பின் கடல் அவரிடம் சிக்கி பட்டபாடு இருக்கிறதே... அக்னி தீர்த்த கடலின் கரையில் இறங்கியதுமே ஒரு பெரிய மீன் கூட்டமே அவரை சூழ்ந்து கொண்டது போல பயங்கர பில்டப். விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், அக்னி தீர்த்த கரையில் இருந்த குறிப்பிட்ட கி.மீ., தூரத்திற்கு குப்பையை தவிர வேறு எதுவும் இருக்காது என்று.


பாவங்களை தீர்க்கிறோம் என்கிற பெயரில் பூஜை பொருட்களை கடலில் வீசி, அக்னி தீர்த்த கடலை நாறடிக்கும் பக்தர்கள் சிலரின் செயல் இன்னும் தொடர்கிறது. இதனால் அக்னி கடற்கரை பெரும்பாலும் கழிவுகளாலே காட்சியளிக்கும். அங்கு மனிதர்கள் நிற்கவே முகம் சுழிப்பார்கள். அப்படிப்பட்ட கடற்கரையில் சாதனா இறங்கியதும், அவருக்கு மீன் வந்ததாம், அந்த மீனை பிடிக்க அவர் முயற்சித்தாராம், பின்னர் அதற்காக தன் புடவையை பயன்படுத்தி முதல் மரியாதை ராதா போல மீன் பிடிக்க முயற்சிப்பாராம்... எவ்வளவு முயற்சித்தாலும், வீசிய வலையில் குப்பை தான் வரும் என்பது ராமேஸ்வரம் வாசிகளுக்கும், ராமேஸ்வரத்தை நன்கு தெரிந்தவர்களுக்கும் நன்றாக தெரியும். 


ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், வழக்கம் போல முட்டிக்கால் அளவு நீரில் நின்று, கச்சத்தீவில் மீன் பிடிப்பதைப் போன்று பில்டப் மட்டும் கொடுத்துக் கொண்டு, அந்த வீடியோவை முடித்திருக்கிறார் சாதனா. நல்லவேளை இலங்கைக்கு போறேன் என்று கடலில் நடந்து போகாமல் விட்டாரே என்கிற வரை சந்தோசம். 


கடலில் இறங்கியவரை தன் பங்கிற்கு ஏற்கனவே கலங்கி நிற்கும் கடலை, மேலும் கலக்கியது தான் பாக்கி. அக்னி தீர்த்த கடலில் கால் வைத்து பாவத்தை நீக்கினாரோ இல்லையோ... பாவம் அந்த மீன்கள் என்று படுத்திவிட்டார்.