தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் அனைவரையும் கட்டிபோட்டு இருந்தவர் எம்.ஆர்.ராதா என்று சொன்னால் அது மிகையாகாது. இவரை பற்றிய வரலாற்றை இப்போது பார்போம்.. 1907ஆம் ஆண்டு சென்னை சூளையில் இராசகோபாலுக்கும் இராசம்மாளுக்கும் மகனாகப் பிறந்த இராதாகிருஷ்ணன் (ராதா) இளம் வயதிலேயே நாடக நடிகரானார். ஜெகந்நாத ஐயரின் நாடகக் கம்பெனிதான் ராதா தொடங்கிய  இடம். “காந்தா” என்ற கரகரத்த குரலை முதன்முதலில் கேட்ட ஊர் திருச்சி தான். ராதாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற 'ரத்தக்கண்ணீர்' நாடகம் 1949-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் திருச்சியில் தான் அரங்கேறியது. 3000 முறை மேடை கண்ட அந்த நாடகத்தைத் திருவாரூர் கே.தங்கராசு எழுதினார். சாகித்ய அகாடமியின் செயலாளராக நேருவால் அமர்த்தப்பட்ட பிரபாகர் மாச்வே ஒரு மராத்தியர். அவர் ரத்தக்கண்ணீர் பார்த்துவிட்டு, சிறந்த உலக மேடை நாடகங்களில் ரத்தக்கண்ணீர் ஒன்று என்றும்,  எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றில் உள்ள முக்கியப் பெயர்களில் ஒன்று என்றும் சொன்னார். ரத்தக்கண்ணீர் நாடகத்தை காங்கிரஸ்காரரான பி.ஏ.பெருமாள் முதலியார் சினிமாவாக எடுத்தார். ராதா முதலியாரிடம் சில நிபந்தனைகள் விதித்தார். சினிமாவுக்காக நாடகம் நடத்துவதை விட முடியாது. நாடகம் முடிந்துதான் ஷூட்டிங் வைக்கணும். நாடகத்தின் உச்சக் காட்சியான தன் மனைவியை நண்பன் பாலுவுக்கு மணமுடிப்பதை மாற்றக்கூடாது என்றார்.




அந்த வகையில் 1954 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'ரத்தக்கண்ணீர்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மூட நம்பிக்கைகளை நகையாடிய படம் அது. சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் மக்கள் ஏற்பார்கள் என்பதன் சிறந்த உதாரணம் ரத்தக்கண்ணீர். இன்று தொலைக்காட்சிகளில் போட்டால்கூட 68 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் ரசித்து, ராதாவின் வசனங்களைப் இன்றளவும் பேசுகிறார்கள். அதுபோலவே ராதாவின் பெயரோடு ஒட்டி உறவாடும் 'நடிகவேள்' பட்டம் தரப்பட்டதும் திருச்சியில் தான். மேலும் ’இழந்த காதல்' நாடகம்தான் ராதாவை அடையாளப்படுத்திய நாடகம். அதில் “எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைக் காணத்தவறாதீர்கள்” என்று விளம்பரம் செய்யப்பட்ட நாடகமிது. இந்த நாடகம் சேலத்தில் நடந்தபோதுதான் ராதாவின் ஆற்றலைக் கண்டு வியந்த அண்ணா, பெரியாரையும் அழைத்துவந்து நாடகம் பார்க்கவைத்தார். மேலை நாட்டு நடிகர் பால்முனிக்கு ராதாவை அண்ணா ஒப்பிட்டார். ராதாவின் ஒரு நாடகம் தாங்கள் நடத்தும் 100 மாநாடுகளுக்குச் சமம் என்றார் அண்ணா. இந்த நட்பால்தான் ராதாவின் 'திராவிட மறுமலர்ச்சி நாடக சபா' உருவானது. ஆனாலும் அண்ணா பெரியாரை அரசியலில் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரம்' என்று புத்தகம் எழுதி அண்ணாவிடமே கொடுத்து, இதைப் படியுங்கள் என்றவர் ராதா.




மேலும் புது நாடகம் ஒன்று போட எம்.ஆர்.ராதா விரும்பினார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த இளைஞரான கருணாநிதி தஞ்சையிலேயே தங்கி 'தூக்கு மேடை' என்ற நாடகத்தை எழுதிக்கொடுத்தார். மகிழ்ந்துபோன ராதா, நாடகம் எழுதியவரை 'அறிஞர் கருணாநிதி' என்று போஸ்டர்களில் விளம்பரப்படுத்தினார். அண்ணாவுக்கான அடைமொழியைத் தனக்குப் பயன்படுத்தியதை கருணாநிதி ஏற்கவில்லை. “ஏன் உங்க கட்சியில ஒரு அறிஞர்தானா” என்று ஜாலியாகச் சிரித்த ராதா, நாடகத்தின் முதல் நாள் கருணாநிதியை ‘கலைஞர் கருணாநிதி’ என்று அழைத்தார். அன்றுமுதலே தான் கலைஞரானதாகவும் அதுவே தன்னோடு நிலைத்ததாகவும் கலைஞர் 13-9-1989 முரசொலியில் எழுதினார். மேலும் பெரியார் மீது அதிகம் பற்றுக்கொண்டவராக ராதா இருந்தார். இந்நிலையில் ராதாவைப்போன்ற ஒருவர் தொண்டராகக் கிடைக்க உண்மையில் பெரியார் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று  காமராசர் கூறினாராம்.




மேலும் ராதாவால் ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவர் அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு. எங்கும் அதிகநேரம் உட்கார்ந்தே பழக்கப்படாத ஜி.டி.நாயுடு 3 மணி நேரம் உட்கார இடமில்லாதபோதும் நாடக இசைக்குழுக்கான இடத்திலிருந்து நாடகத்தை ரசித்தார். தனது தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்காக ராதாவின் நாடகத்தை நாயுடு நடத்தினார். அந்த நாடகத்திற்குத் தலைமை ஏற்ற நோபல் விஞ்ஞானி சர் சி.வி.இராமன் பேசும்போது, மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதாவின் நாடகங்களும் வேண்டும் என்றார். இம்பாலா காரை அந்தஸ்தின் அடையாளமாகப் பலர் பார்த்தனர். ஆனால் ராதா தனது இம்பாலா காரில் கேளம்பாக்கத்தில் இருந்த தனது மாட்டுப்பண்ணைக்கு வைக்கோல் ஏற்றி அனுப்பினார். என்ன இது, வைக்கோல் ஏத்த இம்பாலாவா என்ற அந்தப் பெரிய நடிகர் ராதாவிடம் கேட்ட போது, இதுவும் ஒரு சாயம் பூசிய தகரம்தான். நம் வேலையை சற்று வேகமாகச் செய்துகொள்ளப் பயன்படும் ஒரு சாதனம் அவ்வளவுதான். இதற்கு மேல் எந்த மதிப்பும் அதுக்கு இல்லை. பசிக்கும் என் மாட்டுக்கு உடனே அனுப்பத்தான் வைக்கோலை இம்பாலாவில் ஏத்தினேன் என்றாராம். 




இந்த அளவுக்கு பகுத்தறிவு கொண்ட எம்.ஆர்.ராதா 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17  ஆம் தேதி மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு திருச்சியில் காலமானார். எவ்வளவு பெரிய பேரும், புகழும் பெற்றும் தனது எளிமையை மாற்றாத எம்.ஆர்.ராதாவின் வாழ்ந்த இடமும், நினைவிடமும் தற்போது அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. ஆம். புகழ்பெற்ற அம்மனிதரின் நினைவிடம் திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் இருந்தது. ஆனால் அவருடைய வாரிசுகள் தனது சொத்துப்பங்குகளை விற்ற போது இவற்றையும் சேர்த்து விற்றுவிட்டது. அவருக்கான முக்கிய அடையாளத்தையே அழித்துவிட்டது.  ஆனால் குறைந்தபட்சம் நினைவிடத்தையாவது விட்டு வைத்திருக்கலாம் என்பது நாடக ரசிகர்களின் ஒரு கருத்தாக உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண