விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘அடியே’. இந்த படத்தில் கௌரி கிஷன் நாயகியாக நடித்துள்ள நிலையில், வெங்கட் பிரபு முக்கிய கேரக்டரில் இடம் பெற்றுள்ளார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் அடியே படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை
சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி இருக்கும் அடியே திரைப்படம் நிகர் உலகம் (alternate reality) என்று சொல்லப்படும் கான்செப்ட்டை மையமாக கொண்டு ஒரு காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகர் உலகம் என்று சொல்லப்படும் உலகத்தில் நமது உலகத்தில் இருப்பதுபோல் இல்லாமல் எல்லாம் வேறு ஒன்றாக இருக்கும். இதை தனது படத்தில் பயன்படுத்தி இருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தமிழ் சினிமாவில் சமகாலத்தில் அம்சங்களை எல்லாம் படத்தில் வைத்து ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.
மாத்தி யோசி
குட்டையை குழப்பி மீன் பிடிப்பதை போல நம்மை கதையில் குழப்பத்தில் ஆழ்த்தி இரண்டாம் பாதியில் விளக்கம் கொடுக்கும் போது தான் என்ன நடக்கிறது என்பதே புரிகிறது. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் ஆங்காங்கே தனது ட்ரேட் மார்க் கற்பனையால் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார். 'ஹூண்டாய் பிரஷ், பகார்டி பேஸ்ட், கோல்டு ஃபிளேக் டெட்டால், கக்காபிக் பாத்ரூம் கிளீனர் என பொருட்களுக்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்.
மேலும் ஃபார்முலா 1 ரேஸர் அஜித்குமார், கால்பந்து வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரொனால்டோ, கிறிஸ்டஃபர் நோலன் மற்றும் ஷங்கர் இணைந்து படம் இயக்குவது தொடர்பான அறிவிப்பு, தமிழ் திணிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு, விஜய்யின் யோஹன் பட காட்சிகள், விஷால் மற்றும் ராதாரவி ஒன்றாக இருப்பது. அட்லி பெயரை டட்லியாக மாற்றியிருபது, பிரதமராக கேப்டன், மன்சூர் அலிகானின் 3.0, ட்ரோன் டெலிவரி, மியூசிக் டைரக்டராக பயில்வான் ரங்கநாதன் வருவது என படம் முழுக்க கற்பனை உலகத்தை கலந்து கட்டி அடித்துள்ளார்.
தனுஷ் ரசிகராக கூல் சுரேஷ்
நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஆனால் சிம்பு ரசிகராக இல்லாமல் வெறித்தனமான தனுஷ் ரசிகராக இடம் பெற்றுள்ளார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு வசனம் பதித்த டீ. ஷர்டை மாட்டிக்கொண்டு வாய் பேச் முடியாத ஒருவராக இந்தப் படத்தில் அவர் நடித்துள்ள காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வாயால் வாள் வீச்சும் கூல் சுரேஷ் வாய் பேச முடியாத கதாபாத்திரம் என்பது ஆச்சரியமா தான் இருக்கிறது.