டொவினோ தாமஸ் நடித்த 2018 திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது சிறந்த ஆசிய நடிகருக்கான சர்வதேச விருதை வென்றுள்ளார் நடிகர் டொவினோ தாமஸ்.
டொவினோ தாமஸ்
மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் டோவினோ தாமஸ். மாயா நதி, மின்னல் முரளி, தள்ளுமாலா முதலிய படங்களின் மூலம் மலையாள ரசிகர்கள் தாண்டியும் கவனமீர்த்தார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘2018’ இந்தியா முழுவதிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
2018ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றதோடு மட்டுமில்லாமல் 2018 திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில் இடம்பெற்றது. மேலும் மக்களிடம் ’இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி” என்கிற பாராட்டுக்களையும் பெற்றது.
ஆஸ்கர் தேர்வு
மேலும் 2024ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பில் டொவினோ தாமஸ் நடித்திருக்கும் 2018 திரைப்படம் தேர்வாகி இருக்கிறது. இந்தத் தகவலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார் நடிகர் டொவினோ தாமஸ்.
சிறந்த ஆசிய நடிகர்
மேலும் ஆஸ்கர் விருதைப் போல் மற்றுமொரு முக்கியமான விருதான செப்டிமியஸ் விருதிற்கு சிறந்த ஆசிய நடிகர் பிரிவின் கீழ் பரிந்துரைக்கப் பட்டிருந்தார் டோவினோ தாமஸ். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நெதர்லாந்தில் நடைபெற்ற இந்த சர்வதேச செப்டிமியஸ் விருது விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார் டொவினோ தாமஸ். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரையுலகப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
வெளிவர இருக்கும் படங்கள்
தற்போது டொவினோ தாமஸ் நடிகர் திலகம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஹனி பீ ஆகிய படங்களை இயக்கிய லால் ஜூனியர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டாரான டேவிட் படிக்கல்லின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து டொவினோ தாமஸ் ஏ.ஆர்.எம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். டொவினோ தாமஸின் முதல் பான் இந்தியத் திரைப்படமாக இது இருக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் டோவினோ தாமஸ் 1900, 1950, 1990 என மூன்று காலங்களைச் சேர்ந்த மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாசில் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்து கவனமீர்த்த மின்னல் முரளி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.