ஒரு நிஜமான கேங்க் ஃபைட்டை நேரில் பார்த்தவர்களுக்கு படங்களில் வரும் எவ்வளவு பெரிய ஆக்ஷன் திரைப்படமும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. ஆக்ஷன் என்றால், டாம் க்ரூஸைப் போல் ஓடும் ரயில்களில் சண்டை போடுவதோ, ஒரே ஆள் நூற்றுக்கணக்கான வில்லன்களை அடிப்பதும் மட்டும் இல்லை.
இது எதுவும் இல்லாத ஒரு உண்மையான ஆக்ஷன் படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் நிச்சயம் தள்ளுமாலா படத்தைப் பார்க்க வேண்டும். இன்றுடன் ஓராண்டுகளை நிறைவு செய்கிறது தள்ளுமாலா..
டோவினோ தாம்ஸ், கல்யாணி பிரியதர்ஷினி, ஷினே டாம் சாக்கோ, லூக்மன் அவரன் உள்ளிட்டோர் நடித்து கலித் ரஹ்மான் இயக்கிய இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்தார்.
மலையாள சினிமாக்களில் இஸ்லாமியர்கள்
எப்போதும் தலையில் குல்லா அணிந்துக்கொண்டு தொழுகை செய்யும் இஸ்லாமியரைத் தவிர பெரிய அளவிலான குனாம்சங்கள் கொண்ட கதாபாத்திரங்களை நாம் தமிழ் சினிமாக்களில் பார்த்ததில்லை. அந்த வகையில் சற்று விதிவிலக்கான ஒரு படம் என்றால் அது ‘மாநாடு’.
இந்தப் படத்தைத் தவிர்த்து எந்த வித துருத்தலும் இல்லாமல் மிக இயல்பாக ஒரு இஸ்லாமிய கதாபாத்திரத்தை தமிழ் சினிமா இயக்குநர்களால் உருவாக்க முடிவதில்லை என்று ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் மலையாள சினிமாக்களில் ஒரு இஸ்லாமியரைக் கொண்டு, நாயகன் படத்திற்கு நிகராக மாலிக் என்கிற படத்தை பார்க்கிறோம்.
தள்ளுமாலா படத்தில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இஸ்லாமியச் சமூகத்தில் சமகாலத் தலைமுறையினர் தான் அந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். இந்தக் கலாச்சார மாற்றத்தை அடைந்திருக்கிறது மலையாள சினிமா. இப்படியாக இன்றைய தலைமுறை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவனின் கதைதான் தள்ளுமாலா!
வம்பு சண்டைக்கு போறதில்ல வந்த சண்டையை விடுவதில்ல
நம் ஒவ்வொருவரின் நட்பு வட்டத்திற்குள் இப்படியான ஒரு கதாபாத்திரத்தை பார்த்திருப்போம். அதாவது சண்டை போடுவதற்கு அவர்களுக்கு எந்த விதமான காரணமும் தேவையில்லை. பார்த்தால் , பேசினால் , தனது காலணியை அழுக்குப்படுத்தினால் , முறைத்தால், தெரியாமல் மேலே வந்து இடித்தால் என சண்டை போடுவதற்கு ஏதாவது ஒரு காரணம் அவர்களுக்கு இருந்துகொண்டே தான் இருக்கும். சண்டையிடுவது என்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. உடலின் ஒரு தாகம் போல் இருந்துகொண்டே இருக்கும்.
மனவாளன் வசீம் என்கிற சண்டைக்காரன்
அப்படியான ஒரு கூட்டம் தான் மணவாளன் வசீம் (டொவினோ தாமஸ்) மற்றும் அவனது நண்பர்கள். அந்த நண்பர்களும் ஏதோ ஒரு சண்டையின்போது தான் அவனுக்கு பழக்கப்பட்டவர்கள். தனது வாழ்க்கையில் பல்வேறு சண்டைகளில் வசீம் ஈடுபட்டிருக்கிறான். இந்த சண்டைகளின் பின்னணியில் இருக்கும் கதை என்ன, இதற்கு அடுத்து நடக்கப்போகும் கதை என்ன என்பவையே தள்ளுமாலா படத்தின் ஒட்டுமொத்த கதையுமே.
இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், ஒரு கதையைத் தொடங்கி அதை பாதியில் நிறுத்திவிட்டு மற்றொரு கதைக்குச் சென்று அதில் இருந்து வேறொரு கதைக்குச் சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கே திரும்பி வந்து.. என, பார்ப்பவர்களுக்கு ஒரு சிக்கலான வீடியோ கேம் விளையாடும் அனுபவத்தைக் கொடுகிறது படம்.
ஒவ்வொரு சண்டைக்காட்சியும் மிக நுட்பமாக காட்சிப்படுத்தப் பட்டு சுவாரஸ்யம் குறையாத வகையில் எடிட் செய்யப்பட்டிருப்பதே இந்தப் படத்தை ஒரு நவீன அனுபவமாக மாற்றுகிறது.
வன்முறையை கொண்டாடுகிறதா?
இந்த மாதிரியான ஒரு படம் வன்முறையை அதிகமாகக் கொண்டாடுகிறது என்கிற கேள்வி பார்வையாளர்களுக்கு வரலாம். தள்ளுமாலா படத்தின் நோக்கம் வன்முறையைக் கொண்டாடுவதாக இல்லாமல், எந்த விதமான பின் விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல் ஆண் என்கிற அடையாளத்தின் சுமையினால் அவர்கள் செய்யும் முட்டாள்தனங்களை குற்றம்சாட்டாமல் படம்பிடித்துக் காட்டுவதாகவே இருக்கிறது.