இந்த ஆண்டு  தொடக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படம், காஷ்மீரில் இருந்து 1990ஆம் ஆண்டு பண்டிதர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும், இஸ்லாமிய வெறுப்பு பரப்புரையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன.


அதே சமயம் இப்படம் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவினர் பலரது பாராட்டுகளைப் பெற்றது. மேலும், பாஜக ஆளும் சில மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்கள் பெரும்பாலும் படுதோல்வியை சந்தித்த நிலையில், சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் நாடு முழுவதும் 340 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்ததாக கூறப்படுகிறது.


சர்வதேச திரைப்பட விழாவில் அதிருப்தி:


இந்நிலையில், அண்மையில் கோவாவில் நடந்து முடிந்த சர்வதேச  திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது.  அதுகுறித்து நிறைவு விழாவில் பேசிய திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட், தி காஷ்மீர் ஃபைல்ஸ்  வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை. இந்த படத்தை பார்த்த நாங்கள் அனைவரும் கலக்கமடைந்தோம், அதிர்ச்சியடைந்தோம்.  இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம் என கூறினார்.


கண்டனங்களும், எதிர்ப்புகளும்:


நாடவ் லேபிட்டின் இந்த கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், இதுதொடர்பாக இஸ்ரேல் துறைமுகம் சார்பில் வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், நாடவ் லேபிட்டின் கருத்திற்கு தொடர்ந்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர், நடிகர்கள் என பலரும் எதிர்ப்பையும், விமர்ச்சனங்களையும் முன்வைத்தனர்.


மன்னிப்பு கோரிய நாடவ் லேபிட்:


இந்நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் மீதான தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால், அதற்காக முழு மன்னிப்பு கோருவதாக நாடவ் லேபிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீரி பண்டிட் சமூகத்தையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களையோ அவமதிப்பது தனது நோக்கம் அல்ல. அதேநேரம், நான் சொன்னது அனைத்தும் உண்மை.  எனக்கும் என் சக தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு மோசமான பரப்புரை திரைப்படமாகும். இது ஒரு மதிப்புமிக்க போட்டிப் பிரிவுக்கு இடமில்லாதது மற்றும் பொருத்தமற்றது. அதை மீண்டும் மீண்டும் கூறுவேன். 


எனது கேள்வி என்ன? - நாடவ்


இந்தத் திரைப்படம் ஒரு சித்தரிக்கப்பட்ட மோசமான வன்முறையைப் பயன்படுத்தியது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம்.  விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் வகையில்  தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கோபத்தில் இருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் படத்தைப் பற்றி யாராவது அப்படிப் பேசினால் நானும் கோபப்படுவேன். எனது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், உண்மைகள் என்ன என்பதுதான் எனது கேள்வி என்பது, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத் தயாரிப்பாளருக்கு நன்றாகத் தெரியும் என, கோவா திரைப்பட தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் விளக்கமளித்துள்ளார்.