2023ம் ஆண்டின் கடைசி நாளில் அந்த ஆண்டில் சினிமா துறை ஏராளமான சர்ச்சைகளை சந்தித்து அவை இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறின. அப்படி திரைத்துறை சந்தித்த பல்வேறு பஞ்சாயத்து நிகழ்வுகள் குறித்து ஒரு பார்வை...


பொம்மன்- பெள்ளி :


கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கத்தில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண திரைப்படம் வெளியானது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயை பிரிந்த ஒரு குட்டி யானையை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதிக்கும் இடையே இருந்து உறவை உணர்வுப்பூர்வமாக சித்தரித்த இந்த ஆவண திரைப்படம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை தட்டிச் சென்றது. இதன் மூலம் அப்படத்தில் நடித்திருந்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் பிரபலமடைந்தனர். 



இயக்குனர் கார்த்திக்கி பொம்மன், பெள்ளி தம்பதியினரிடம் பணமோசடி செய்ததாக புகார் அளித்தனர். திருமண விழா காட்சி அமைப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் பணம் கொடுக்காத காரணத்தால் தன்னுடைய பேத்தியின் படிப்புக்காக போஸ்ட் ஆபிஸில் போட்ட பணத்தை கொடுத்து அந்த காட்சியாக அமைக்க பண உதவி செய்துள்ளனர். அந்த பணத்தை இயக்குநர் கார்த்திக்கி அதை திருப்பி தரவில்லை என்றும் வங்கியில் பணம் போட்டதாக பேட்டி அளித்து இருப்பது பொய் என்றும் புகார் அளித்தனர். இந்த சர்ச்சை இணையத்தில் ஒரு பேசு பொருளானது. 


நடிகர் விஷால் :


மார்க் ஆண்டனியின் படத்திற்கு 'CBFC' சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக புகார் அளித்து இருந்தார் நடிகர் விஷால். அதனை தொடர்ந்து பல இயக்குநர்களும் படத்திற்கு வரிவிலக்கு பெற  லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டினர். இந்த சர்ச்சை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


 



ஏ.ஆர். ரஹ்மான் :


ஏ.ஆர். ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் 'மறக்குமா நெஞ்சம்' இசை கச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றதில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்று. போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல், பார்க்கிங் பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் டிக்கெட் வாங்கிய பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. தடைகளை கடந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றவர்களும் பல மோசமான அனுபவங்களை சந்தித்தனர். அதிருப்தி அடைந்த மக்கள் பட்ட அவதிகள் சோசியல் மீடியா எங்கும் பெரும் பேசு பொருளாக மாறியது. 


சூப்பர் ஸ்டார் :


நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் இடையே யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் பெரும் பெருபொருளாக மாறியது. அதற்கு  பதில் அளிக்கும் விதமாக ரஜினி மற்றும் விஜய் இருவரும் குட்டி ஸ்டோரி சொல்கிறேன் என காக்கா கழுகு ஸ்டோரிகளை சொல்ல அதை வைத்து கொண்டு இருதரப்பு ரசிகர்களும் சோசியல் மீடியாவில் முட்டி மோதி கொண்டனர். இந்த சர்ச்சை திரையுலகத்தினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.