Vijayakanth-Ibrahim Rowther: இப்ராஹிம் ராவுத்தர் மற்றும் விஜயகாந்த் நட்பை வைத்து படம் எடுக்கலாம் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. 

 

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். 29ம் தேதி மாலை விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அவருடைய நட்பு மற்றும் மனிதாபிமானம் குறித்தும் பலரும் பேசினர். 

 

ஆரம்பம் முதல் விஜயகாந்திற்கு நட்பு ரீதியில் துணையாக இருந்து படங்களில் நடிக்க ஆதரவு அளித்த இப்ராஹிம் ராவுத்தர் பற்றியும், விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் நட்பு பற்றியும் சினிமாவை சேர்ந்தவர்கள் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் இயக்குநர் செல்வமணி அளித்துள்ள நேர்க்காணல் ஒன்றில், இப்ராஹிம் ராவுத்தர் மற்றும் விஜயகாந்த் நட்பு பற்றி பேசியுள்ளார். அதில், ”என்னை விஜயகாந்திடம் படத்தின் கதையை ராவுத்தர் சொல்லச் சொன்னார். கதையை கேட்ட விஜயகாந்த் படம் சரியாக இல்லை” என்றார். உடனே வந்த ராவுத்தர் அந்த படத்துக்கு ஓகே சொல்லிட்டார். அப்போது பேசிய விஜயகாந்த், ராவுத்தரை பார்த்து என்னை அவமானப்படுத்தவே இருக்க, அப்பறம் எதுக்கு என்னை கதை கேட்க சொன்ன? என்று கேட்டார். ஆனாலும், ராவுத்தர் சொன்ன கதையில் தான் விஜயகாந்த் நடித்தார். 

 

ராவுத்தர் சொல்லி அனுப்பும் டாக்குமெண்டுகளில் என்ன இருக்கும் என்று கூட பார்க்காமல் விஜயகாந்த் கையெழுத்து போட்டு அனுப்புவார். கணவன், மனைவி, காதலி நட்பு கூட அப்படி இருக்காது. விஜயகாந்துக்கும், ராவுத்தருக்கும் இருந்த நட்பு உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது” என்றார்.

2015-ஆம் ஆண்டு மறைவதற்கு முன்பாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இப்ராஹிம் ராவுத்தரை விஜயகாந்த் அடிக்கடி சென்று சந்தித்து வந்தார். சுயநினைவு இழந்து இப்ராஹிம் ராவுத்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு குறித்த கடிதம் ஒன்றை விஜயகாந்த் எழுதியிருந்தார்.


அதில் "நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முன்னே வந்து சென்றன.




காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா” என்று எழுதியிருந்தார்.




இருவரது நட்பு பற்றி திரைத்துறை சேர்ந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் பேசி வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த், ராவுத்தர் நட்பு வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.