Top 50 Asian Celebrities: ஆசியாவிலேயே சிறந்த பிரபலங்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விஜய் இடம்பெற்றுள்ளார். 

 

2023ம் ஆண்டு முடிந்து 2024ம் ஆண்டு வர உள்ளதால் இந்த ஆண்டின் சிறந்த நடிகர்கள், நடிகைகள், சிறந்த பாலிவுட், ஹாலிவுட் படங்கள், ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோக்கள் என ஒவ்வொன்றும் பகிரப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டில் கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட படமாக ஷாருக்கான் நடித்த ஜவான், லியோ உள்ளது. உலகளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் ஜவான் மற்றும் பதான் படங்கள் இடம்பெற்றுள்ளன. 

 

இந்த சூழலில் பிரபல லண்டன் வார இதழான ஈஸ்டர்ன் ஐ-ல் 2023ம் ஆண்டுக்கான ஆசிய பிரபலங்களின் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. டாப்50 பிரபலங்கள் என்ற வகையில் வெளியான பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த பதான் படம் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் உலகளவில் அதிகம் தேடும் படங்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. அதேநேரம், அண்மையில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படமும் பாக்ஸ் ஆபிசில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து முதலிடத்தை பிடித்தது. 

 

இந்த இரண்டு படங்களும் ஷாருக்கானிற்கு பெரிய அளவில் வெற்றியை தந்ததால் ஆசியாவில் டாப் 50 பிரபலங்களின் பட்டியலில் ஷாருக்கான் இடம்பெற வைத்துள்ளது. ஷாருக்கானை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஆலியா பட் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தி ஹார்ட்  ஆஃப் ஸ்டோன் படத்தில் மூலம் திரையில் அறிமுகமான ஆலியா பட் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாட்டு ரசிகர்களையும் ஈர்த்துள்ளார். அவரைதொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா நடிப்பில் சிட்டடெல் மற்றும் லவ் அகெய்ன் போன்ற படங்கள் வெளியாகின. 

 

இந்த வரிசையில் பஞ்சாப் நடிகர் தில்ஜித் தோசன்ஜ் 4-வது இடத்திலும் பாடகி சார்லி XCX 5வது இடத்திலும், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 6வது இடத்திலும், பாடகி ஷ்ரேயா கோஷல் 7வது இடத்திலும் உள்ளனர். இதில் தமிழ் நடிகர் விஜய் 8வது இடத்தில் உள்ளார். லியோ படத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்ட விஜய் ஆசிய அளவில் பிரபலமான நடிகராக உள்ளார். 

 

அடுத்ததாக 9வது இடத்தில் பாகிஸ்தான் நடிகர் வஹாஜ் அலி 9வது இடத்திலும், தி மார்வல்ஸ் படத்தில் நடித்த இமான் வெள்ளனி 10வது இடத்திலும் உள்ளனர். இவர்களை தவிர ஆசியாவில் பிரபலமானவர்களின் பட்டியலில் அமிதாப் பச்சன், அரிஜித் சிங், தீபிகா படுகோனே, அனில் கபூர் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.