சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு தொடர் வெற்றி அடைவதற்கு முக்கியமான காரணம் கதைக்களம் என்றாலும் அதை சூடு பிடிக்க வைக்க நிச்சயம் ஒரு நெகடிவ் கதாபாத்திரம் தேவை. அப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த சில நெகடிவ் கதாபாத்திரங்கள் பற்றி காணலாம் :
குணசேகரன் - எதிர் நீச்சல் :
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஏராளமான தொடர்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடராக ஏராளமான ரசிகர்களை பெற்ற ஒரு தொடர் எதிர் நீச்சல். இந்த சீரியல் இத்தனை பிரபலமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க முக்கியமான காரணம் அதில் வரும் குணசேகரன் என்ற சிக்கலான கதாபாத்திரம் மற்றும் சுவாரஸ்யமான பல ட்விஸ்ட்கள் நிறைந்த கதைக்களம் என்பது தான்.
குணசேகரன் கதாபாத்திரத்தின் அமைப்பை மேலும் அழகு படுத்துவது அவரின் நுணுக்கமான நடிப்பு, வசனங்களின் டெலிவரன்ஸ், கடுப்பான பேச்சு என ஒரு கரடு முரடான ஆளுக்கு தேவையான அனைத்தையும் உள்வாங்கி கொண்டு அதை சிறப்பாக வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்களை வெறுக்க வைப்பதில் அவர் ஸ்கோர் செய்து விடுகிறார். சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் கதாபாத்திரம் இவர் தான்.
கோலங்கள் - ஆதி :
சுமார் ஆறு ஆண்டுகள் சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' சீரியலில் மிகவும் அபிமான நட்சத்திரங்களாக நெஞ்சில் பதிந்தவர்கள் அபி, ஆதி, தொல்காப்பியன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள். இதில் ஆதியாக நடித்த அஜய் கபூர் முகம் இன்றும் பலருக்கு ஆதியாகவே தெரியும். அளவுக்கு அதிகமாக வெறுப்பை சம்பாதித்த ஒரு கதாபாத்திரம் என்றே சொல்ல வேண்டும். அபியிடம் இருந்து ஏமாற்றி சொத்தை பறித்த ஆதியை பலரும் நேரில் அடிக்கவே செல்லும் அளவிற்கு நடிப்பில் விஷத்தை கக்கியவர்.
தெய்வமகள் - காயத்ரி
தெய்வமகள் சீரியலில் உக்கிரமான ஒரு அண்ணியாக நடித்தவர் நடிகை ரேகா. ஜெய்ஹிந்த் விலாஸ் மூத்த மருமகள் என்ற கர்வத்தில் அனைவரையும் ஆட்டி வைக்கும் ஒரு கொடுமையான அண்ணியாக மிரட்டியிருப்பார். அவரின் வில்லத்தனமான நடவடிக்கை, திமிரான பேச்சு, கர்வமான தோரணை என அனைத்தும் ரசிகர்களின் ஆத்திரத்தை எகிற வைத்தது. சதி வேலைகளை செய்வதில் ஒரு கில்லாடியாக இருந்த காயத்ரி கதாபாத்திரம் அவரை சின்னத்திரையின் நீலாம்பரி என்ற பெயரை பெற்று தந்தது.
மெட்டி ஒலி - ராஜம் அம்மா
அம்மி அம்மி மிதித்து என்ற இந்த பாடலை என்றும் 90'ஸ் கிட்ஸ்களால் மறக்கமுடியாத அளவுக்கு மிகவும் பிரபலமான ஒரு தொடர் மெட்டி ஒலி. ஐந்து அக்கா தங்கைகளின் பாசம் எந்த அளவிற்கு நினைவில் உள்ளதோ அதே அளவிற்கு ராஜம் மீது இருக்கும் வெறுப்பும் நினைவில் நிலைத்துள்ளது. ஒற்றை அம்மாவாக இருந்து பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்தார் என்பதற்காக இத்தனை காண்டிப்பை மருமகளிடம் காட்ட தேவையில்லை. அம்மா பிள்ளையாக இருப்பது அம்மாவுக்கு வேண்டுமானாலும் சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் அதை வைத்து கொண்டு அனைத்து விஷயங்களிலும் காரியத்தை சாதித்து கொள்ளும் அம்மாவாக ரசிகர்களின் கடுப்பை கிளப்பியவர்
பாரதி கண்ணம்மா - வெண்பா :
வில்லி எந்த அளவிற்கு ஒரு கதைக்களத்தை முற்றிலுமாக மாற்ற முடியும் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணமாக அழகான வில்லியாக கலக்கியவர் பாரதி கண்ணம்மா தொடர் வெண்பா. நட்பு என்ற ஒற்றை வார்த்தையை காட்டியே கணவன் மனைவியை பிரித்து வைத்த கொடும்பாவி. அடுக்கடுக்கான பழியை ஒரு அப்பாவி பெண் மீது போட்டு அவளின் வாழ்க்கையை நாசமாக்கியது மட்டுமல்லாமல் ஒரு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் ஒரு டாக்டராக இருந்து கொண்டு கொலை செய்ய முயற்சிப்பது கொடூரத்தின் உச்சகட்டம். வெண்பா என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் அலர்ஜி ஏற்படும் அளவிற்கு வெறுப்பை கக்கியவள் வெண்பா.
இவர்கள் மட்டுமின்றி அத்திப்பூக்கள் ராணி, அண்ணாமலை சூதாடி சித்தன், சித்தி பிரபாவதி, தங்கம் சீரியல் குலசேகரன் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.