நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.2019 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கிரேன் கீழே விழுந்து படத்தின் உதவி இயக்குநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல் ஆகியவற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
மேலும் நடிகர் விவேக்கின் மரணம், காஜல் அகர்வால் குழந்தை பெற்றது ஆகிய காரணத்தால் இவர்களுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கமல், ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. அதேசமயம் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இதனால் இந்தியன் 2 படத்தின் துணை கதாபாத்திரங்கள் நடிக்கும் காட்சிகளை இயக்குநர்கள் வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளதாகவும், முன்னணி கதாபாத்திரங்களை இயக்குநர் ஷங்கர் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. பல இயக்குநர்கள் இயக்குவதால் இந்தியன் 2 எதிர்பார்த்தபடி இருக்குமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
முன்னதாக 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் உருவாகும் இந்தியன் 2 படம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடும் என எழுத்தாளர் ஜெயமோகன் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.