இணையத்தில் வைரலாகும் 'True Blue' பாடல்
பிரபல பாப் பாடகி டாமி ஜெனிசிஸ் தனது புதிய பாடல் ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் அவர் காளி தெய்வத்தின் வேடமிட்டு நடித்துள்ள காட்சிகள் இந்து மதப்பாற்றாளர்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்து மதத்தின் முதன்மை கடவுள்களில் ஒன்றான காளி தெய்வத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாசமான காட்சிகள் இந்த பாடலில் இடம்பெற்றிருப்பதாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி கடவுளை அவமானப்படுத்துகிறார் டாமி ஜெனிசிஸ் என இந்த பாடலை யூடியூப் தளத்தில் இருந்து நீக்கக் கோரி கோரிக்கை வைத்துள்ளார்கள்.
யார் இந்த டாமி ஜினிசிஸ்
கனடாவில் பிறந்த வளர்ந்த டாமி ஜினிசிஸ் ஒரு பிரபல பாடகி. இவரது இயற்பெயர் ஜெனிசிஸ் யாஸ்மின் மோகன்ராஜ். இவர் பாதி தமிழ் மற்றும் மலையாள பூர்வீகமும் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. இசைத்துறையில் மிக புரட்சிகரமான ஒரு இசை கலைஞராக கருதப்படுகிறார். டாமி ஜெனிசிஸ். தனது பாடல்களின் வழியாக பாலினம் தொடர்பான உரையாடல்களை நிகழ்த்தி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள 'True Blue' பாடலும் இந்து மற்றும் கிறித்தவ மதத்தின் தாக்கத்தால் வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியுள்ளது. இந்த பாடலில் அவர் காளி தெய்வத்தின் வேடமிட்டு பாலினம் மற்றும் காமம் தொடர்பான குறியீடுகளை முன்வைத்து பேசியுள்ளார்.
'True Blue' பாடலுக்கு பரவலாக எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார் ' என்னுடைய பாடலை மத நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்திக் கொள்பவர்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. இந்த பாடலுக்கு வரும் விமர்சனங்களையும் நான் கவனத்தில் எடுத்துக்கொள்ள போவதில்லை." என அவர் தெரிவித்துள்ளார்