காமிக் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு பல படங்கள் வெளிவந்தாலும், அதற்கு விதைபோட்டது என்றால் அது ஸ்பைடர் மேன் தான். டோபி மெகூர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படம் தான், காமிக் கதாபாத்திரங்களை கொண்டு எடுக்கப்படும் படங்களும் பெரும் லாபத்தை ஈட்டி தரும் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்கள் இடையே ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே டோபி மேகூரை கொண்டு 3 படங்களும், ஆண்ட்ரூ கார்பீல்டை கொண்டு இரண்டு ஸ்பைடர் மேன் திரைப்படங்களும், மார்வெல் எனும் பிரமாண்ட திரைப்பட சாம்ராஜ்ஜியமும் உருவாகியுள்ளது.


மார்வெல் திரைப்படங்களில் டாம் ஹாலண்ட் எனும் நடிகர் தான் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் ஏற்கனவே மிகவும் பிரபலமானதாக இருப்பினும், மார்வெல் திரைப்படங்களில் உள்ள பல கதாபாத்திரங்களுடன் இணைந்து நடித்ததன் மூலம், முந்தைய ஸ்பைடர்மேன் நடிகர்களை காட்டிலும், டாம் ஹாலண்ட் மிகவும் பிரபலமானவராக உருவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான, ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படம் மட்டும் ரூ.13 ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இதனிடையே, கடந்த 2016ம் ஆண்டு முதல் ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் தனக்கு ஜோடியாக எம்.ஜே கதாபாத்திரத்தில் நடித்து வரும்,  செண்டாயாவை டாம் ஹாலண்ட் காதலித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகின.






 


இருவரும் ஒன்றாக இருப்பது, பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்பது போன்ற பல புகைப்படங்கள் அவ்வப்போது வெளியானாலும், தாங்கள் காதலிப்பதாக செண்டாயா மற்றும் டாம் ஹாலண்ட் எங்கும் இதுவரை கூறவில்லை. அது ஒரு வதந்தி எனும் விதமாகவே இந்த விவகாரத்தை அவர்கள் கையாண்டு வந்தனர்.   vogue italia எனும் இதழின் அட்டையில் வெளியான செண்டாயாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு, கடும் எதிர்ப்புகள் கிளம்பியபோதும் டாம் ஹாலண்ட் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். மேலும், சமூகவலைதளங்களில் பதிவிடும் பதிவுகளுக்கு, இருவரும் மாறி மாறி காதல் தழும்ப கமெண்டுகளை பதிவிட்டு வருவது டாம் ஹாலண்ட் மற்றும் செண்டாயா காதலிப்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்தது.






 


இந்நிலையில் தான், இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருப்பதாகவும், தங்களது உறவை விரைவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல டாம் ஹாலண்ட் மற்றும் செண்டாயா திட்டமிட்டுள்ளதாகவும், பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் ஒரே வீட்டில் இருவரும் குடியேறி திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் நடித்த ஆண்ட்ரூ கார்பீல்ட் மற்றும் எம்மா ஸ்டோனும் காதலில் விழுந்தனர். இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் பிரிந்து விட்டனர். அதுபோன்று இல்லாமல்  டாம் ஹாலண்ட் மற்றும் செண்டாயா வாழ்வில் ஒன்று சேர வேண்டும் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.