டாம் குரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் திரைப்படம், தயாரிப்பாளருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.332 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மிஷன் இம்பாசிபிள்:


உலகம் முழுவதும் உள்ள ஆக்‌ஷன் ரசிகர்களின் வாட்சி லிஷ்டில், டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்கள் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளன. இந்த திரைப்படங்களின் வரிசையில் ஏற்கனவே 6 திரைப்படங்கள் வெளியான நிலையில். கடைசி திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி, மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் 1 திரைப்படம் கடந்த ஜுலை மாதம் 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. உலகத்தையே காப்பாற்றும் அதே பழைய கதையாக இருந்தாலும், விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


நல்ல வரவேற்பு:


ஆக்‌ஷன் ரசிகர்களை இப்படம் கட்டாயம் குஷிப்படுத்தும் என விமர்சனங்கள் வரத்தொடங்கின. முன்னதாக கடந்த ஆண்டு வெளியான டாம் குரூஸின் டாப் கன் மேவ்ரிக் திரைப்படம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. இதனால் மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகமும் நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரியாக 10 நாட்கள் கழித்து வெளியான இரண்டு திரைப்படங்கள், மிஷன் இம்பாசிபிள் படத்தின் வசூலை முடக்கி போட்டது.


பார்பி & ஓப்பன்ஹெய்மர்:


கடந்த ஜுலை மாதம் 21ம் தேதி பார்பி மற்றும் ஓப்பன்ஹெய்மர் ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகின. மார்க்ரெட் ராபி நடிப்பில் உருவான பார்பி மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவான ஓப்பன்ஹெய்மர் திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் ஆதரவு பெற்றது. வசூலையும் வாரிக்குவித்தது. குறிப்பாக ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 850 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், பார்பி திரைப்படம் 1 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களையும் வாரிக் குவித்துள்ளது. 


முடங்கிய மிஷன் இம்பாசிபிள்:


பார்பி மற்றும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படங்களின் வசூல் வேட்டை, மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் வசூலை முழுமையாக முடக்கியது. இதனால், இத்திரைப்படம் தற்போது வரை வெறும் 560 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.330 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 291 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், ஹாலிவுட் வரலாற்றில் அதிக செலவில் உருவான படங்களின் வரிசையில் 15வது இடத்தில் உள்ளது. எனவே, தயாரிப்பு செலவை தாண்டி லாப கணக்கை தொடங்கவே, இப்படம் 600 மில்லியன் அமெரிக்க டாலரகளை வசூலிக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், மிஷன் இம்பாசிபிள் படத்தின் வசூல் 560 மில்லிய அமெரிக்க டாலர்களுடன் நின்றுள்ளது.