ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஹாலிவுட் நடிகர்களில் மிக மிக முக்கியமான நடிகர் டாம் க்ரூஸ். இவரது மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு மட்டும் என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


மிஷன் இம்பாசிபிள் கடைசி பாகம்:


ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் போலவே மிஷன் இம்பாசிபிள் படத்தில் வரும் ஈதன் கதாபாத்திரம் ஒரு துப்பறியும் அதிகாரி ஆவார். 1996ம் ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியானது முதலே டாம் க்ரூஸின் புகழ் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இதுவரை 7 பாகங்கள் வெளியான நிலையில், மிஷன் இம்பாசிபிள் வரிசைப் படங்களின் கடைசி பாகமாக மிஷன் இம்பாசிபிள் தி பைனல் ரெக்கோனிங் உருவாகி வருகிறது.


இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. படத்தின் டீசர் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகிறது. 62 வயதிலும் டாம்க்ரூஸின் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

மிரட்டும் டீசர்:


இதற்கு முந்தைய பாகங்களில் ஆக்ஷன் காட்சிகளில் காட்டிய வேகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் இந்த பாகத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். 62 வயதிலும் எந்தவித டூப் இல்லாமல் அதிவேகமாக ஓடுவதும், பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்குவதும் என டாம் க்ரூஸின் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இந்த படம் உருவாகி வருகிறது.


பாரமௌண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் அடுத்தாண்டு மே மாதம் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது. உலகம் முழுவதும் பல மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. டாம் க்ரூசுடன் இணைந்து இந்த படத்தில் கடந்த பாகங்களில் இடம்பெற்ற விங் ரேம்ஸ், சைமன் பெக் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஹேலி அட்வெல், வனிசெ கிர்பி, போம் கிளெமென்டிப், ஏஞ்சலே பேசட், ஹென்ட்ரி செர்னி நடித்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:


கடந்த பாகத்தில் ஏஐ-யை வில்லனாக காட்டி இந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள். அதன் இறுதிக்காட்சியில் சாவியுடன் வில்லன் தப்பித்துச் செல்வது போல முடித்திருப்பார்கள். இந்த பாகம் அதன் தொடர்ச்சியுடன் தொடங்க உள்ளது. படத்தின் டீசரிலே பல பிரம்மாண்ட காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை வியக்க வைக்கிறது. குறிப்பாக,, டீசரின் இறுதிக்காட்சியில் Trust me.. one last time என டாம் க்ரூஸ் பேசும் வசனங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது.