மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் மற்றும் பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது அவர் பிரவீன் சத்தாரு இயக்கத்தில் காண்டீவதாரி அர்ஜுனா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் ஒளிப்பதிவாளர் சக்தி பிரதாப் சிங் ஹடா இயக்குனராக அறிமுகமாகும் VT13 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் வருண் தேஜ் ஒரு விமானப்படை விமானியாக நடித்து வருகிறார்.இப்படி தனது திரை வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருந்து வரும் வருண் தேஜ் திருமணம் குறித்த தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தீயாய் பரவிய வதந்தி :
2018ம் ஆண்டு வெளியான அந்தரிக்ஷம் 9000 KMPH மற்றும் 2017ம் ஆண்டு வெளியான மிஸ்டர் என்ற படத்திலும் வருண் தேஜுடன் இணைந்து நடித்தவர் லாவண்யா திரிபாதி. அவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. படப்பிடிப்பு சமயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி பல இடங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாக காணப்பட்டார்கள் என்றும் பல கிசுகிசுக்கள் எழுந்தன. கடந்த காலங்களில் பார்ட்டிகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக காணப்பட்டனர். வருண் தேஜ் தங்கை நிஹாரிகாவும் லாவண்யாவும் நெருங்கிய தோழிகள். டேட்டிங் பற்றின வதந்திகள் குறித்து கேட்டபோது நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என பதிலளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் திருமணம் :
தற்போது தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் மூலம் வெளியான தகவலின் படி வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து ஜூன் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு எடுத்துள்ளதாகவும் திரை பிரபலங்கள் பலரும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் நெருங்கிய தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரின் நிச்சயதார்த்தம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'பிரம்மன்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் அஸ்வின் காக்குமனு இயக்கத்தில் 'தணல்' என்ற படத்தில் நடிகர் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது.