தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன்கல்யாண். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். கோலிவுட்டின் விஜய் மற்றும் அஜித்தைப் போல தெலுங்கின் ஓப்பனிங்கை அள்ளும் நாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் என்று டோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஜனசேனா கட்சியின் தலைவராக அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் கல்யாண் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.




தற்போது, தமிழ் படத்தின் ரீமேக் ஒன்றில் பவன் கல்யாண் நடிக்க ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் சமுத்திரக்கனி எழுதி, இயக்கிய படம் வினோதய சித்தம். ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. வழக்கமான சமுத்திரக்கனி படம் போல அல்லாமல் சற்று மாறுதலாக இருப்பதாக ரசிகர்கள் வரவேற்பை தெரிவித்தனர்.


இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பவன்கல்யாணுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்துவிட்டதாகவும், இதனால் அந்த படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்க ஆசைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் தேஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வினோதய சித்தம் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார். அவருடன் தம்பி ராமையா, முனிஷ்காந்த், ஜெயப்பிரகாஷ், தீபக் ஹரி, ஸ்ரீரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, யுவலட்சுமி ஆகியோரும் நடித்திருப்பார்கள்.




பவன்கல்யாண் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிங்க் படத்தின் ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்திருந்தார். தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றதையடுத்து, தெலுங்கிலும் வக்கீல் சாப் என்ற பெயரில் பிங்க் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக்கான பீம்லா நாயக்கில் நடித்திருந்தார்.


பவன் கல்யாண் ரசிகர்களுக்கு பீம்லா நாயக் ஒரு விருந்தாக அமைந்தது. இதனால் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, தனது ஹாட்ரிக் வெற்றிக்காக நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க பவன்கல்யாண் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண