தெலுங்கு தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தெலுங்கு திரையுலகில் அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஆனால் நடிகர்களுக்கு நாள் வாரியான சம்பளம் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிடப்பட வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.




முன்னதாக கடந்த சில ஆண்டுகளாக திரையரங்கு வருவாய் குறைந்து வருகிறது என்றும், தயாரிப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து வருகிறது என்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஹைதராபாத்தில் பல தயாரிப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி, தொழில்துறையின் உயிர்வாழ்விற்கான விஷயங்களை சரியாக அமைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். அதன் காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு நிறுத்தப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. 


 






இதுகுறித்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட செய்திகுறிப்பில், “தொற்றுநோய்க்கு பிந்தைய வருவாய் சூழ்நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள், திரைப்பட தயாரிப்பாளர்களின் சமூகமாக நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் தயாரிப்பாளர்கள் விவாதிப்பது முக்கியம். நமது சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதும், அதை உறுதி செய்வதும் நமது பொறுப்பு. ஆரோக்கியமான சூழலில் எங்கள் திரைப்படங்களை வெளியிடுகிறோம். இது சம்பந்தமாக, கில்டின் அனைத்து தயாரிப்பாளர் உறுப்பினர்களும் தானாக முன்வந்து ஆகஸ்ட் 1, 2022 முதல் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்து இருந்தனர்.