சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நரேனுக்கு இன்று பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே !!!
தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை தனது எதார்த்தமான நடிப்பால் பெற்றவர் நடிகர் நரேன். தமிழில் ஒரு சில படங்கள் என்றாலும் அவை அனைத்துமே சிறப்பான திரைப்படங்களாக அனைவராலும் பேசக்கூடிய திரைப்படங்களாக இருந்துள்ளன என்பது சிறப்பு. மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் அறிமுகம் கிடைப்பதற்கு முன்னர் விளம்பர படங்களில் பயணத்தை தொடர்ந்தவர் நரேன். 2002ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான நிழல்குத்து மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதற்கு பிறகு பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நரேன் - மிஷ்கின் காம்போ :
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நரேன். அதில் ரவுடித்தனமான கதாபாத்திரம் அவருக்கு. மிஷ்கின் இயக்குனராக அறிமுகமான படம் இது என்றாலும் அந்த அளவிற்கு பேசப்படவில்லை. இருப்பினும் இப்படத்தின் படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. பாடல்கள் மூலம் படம் ஈர்க்கப்பட்டு பிறகு வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நரேனுக்கு ஒரு சிறந்த நடிகர் என்ற மிக பெரிய பிரபலம் கொடுத்தது "அஞ்சாதே" திரைப்படம். இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று பல விருதுகளை குவித்தது. தொடர்ச்சியாக நரேன் - மிஷ்கின் காம்பினேஷன் படங்கள் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மீண்டும் இயக்குனர் மிஸ்கினுடன் இணைந்த நரேன் நடித்த திரைப்படம் "முகமூடி".
மாஸான ரீ என்ட்ரி :
ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "கைதி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மாஸான ஒரு ரீ என்ட்ரி கொடுத்தார் நரேன். இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் வெகு சிறப்பாக அமைந்து இருந்தது. அனைவரின் பாராட்டை பெற்ற நரேனுக்கு மீண்டும் உலகநாயகனின் "விக்ரம்" படத்தில் வாய்ப்பு கிடைக்க தற்போது வேற லெவலுக்கு சென்று விட்டார் நரேன். தற்போது யூகி, ஒத்தைக்கு ஒத்த, குரல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் 2023ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 7ம் தேதியான இன்று தனது 43வது பிறந்தநாள் காணும் நடிகர் நரேனுக்கு நண்பர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.