சிவாஜி படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்தை, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.


சிவாஜி, திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கியிருந்தார். படத்தில் மணிவண்ணன், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா ஒரு பாடலிலும், ஷ்ரேயா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் படங்களில் 2005-ல் வெளியான சந்திரமுகி பட செய்த வசூலை முறியடித்து சாதனை படைத்தது சிவாஜி.


படத்தில் ரஜினிகாந்த் (சிவாஜி) ஒரு மென்பொருள் கட்டுமான அமைப்பாளராக இருப்பார். ஐக்கிய மாகாணங்களில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் அவர்,  மருத்துவம் மற்றும் கல்வியை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்ற முற்படுவார். ஆனால் அதிகாரத்திலுள்ள பெருமுதலாளி ஆதிசேஷன் என்பவர் இவருடைய திட்டத்தை முடக்கி விடுகிறார். ரஜினி எப்படி ஆதிசேஷனை முறியடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை. விறுவிறுப்பான ஸ்க்ரிப்ட், மிரட்டல் கிராஃபிக்ஸ், ஃபைட்ஸ் என சிவாஜி திரைப்படம் பட்டி தொட்டிகள் வரை சக்கைப்போட போட்டது.




ஆசைப்பட்ட ஷங்கர்; வாய்ப்பு கொடுத்த ரஜினி:


ஜென்டில்மேன், காதலன் என வெற்றிப் படங்களைக் கொடுத்த ஷங்கர் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்துத் திரைப்படம் இயக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அவரது கனவு அதுவென்றார். அந்தக் கனவு கைகூடு வெகு காலம் எடுக்கவில்லை. ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் திரைப்படத்தை எடுத்தார். நெடுமுடி வேணு முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஊர்மிளா மடோண்த்கர் மற்றும் மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். இப்படத்தின் வெற்றியினால் பெரிதும் கவரப்பட்ட ரஜினி ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கத் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். பழம் நழுவி பாலில் விழுந்தது போலான வாய்ப்பு. ஆனால் அதற்கு முன்னதாகவே ஐஸ்வர்யா ராயை வைத்து ஜீன்ஸ் எடுக்க ஒப்பந்தமானாதால் ஜீன்ஸில் கவனம் செலுத்தினார் இயக்குநர் ஷங்கர்.


இரட்டை வேடத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா, அமெரிக்காவில் சூட்டிங், 7 அதியங்கள் பின்னணியில் டூயட் என்று அந்தப் படமும் மெகா ஹிட் அடித்தது. அடுத்ததாக முதல்வன், பாய்ஸ், அந்நியன் என மூன்று படங்கள் ஷங்கர் இயக்கினார். பாய்ஸ் மட்டுமே சுமார் ரகமாக இருந்தது. மற்ற இரண்டுமே பிரமாண்ட இயக்குநருக்கு பிரமாண்ட வெற்றியைத் தந்தன. இந்த நிலையில் தான் சிவாஜி படத்தில் ரஜினியை இயக்க ஷங்கர் ஒப்பந்தமானார். 2007ல் சிவாஜி தி பாஸ் திரைப்படம் வெளியானது. தெலுங்கிலும் டப்பிங் ஆனது.


கோலிவுட், டோலிவுட் என சக்கைப்போடு போட்டது சிவாஜி தி பாஸ். வசூலை அள்ளிக்குவித்த படம். அதனால் தான் அதன் 15வது ஆண்டு விழாவில் அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்தை, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன, அவரது மகன் எம்எஸ்.குஹன், அருணா குஹன் ஆகியோர் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.