நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவுவரியை செலுத்திவிட்டதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடர்ந்திருந்த வழக்கில் தமிழ்நாடு அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது. கடந்த  ஆகஸ்ட் மாதம் 10ந் தேதி விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த காரை பயன்படுத்துவதில்லை என்பதால் அந்த காருக்கான நுழைவுவரியை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.




இந்த நிலையில், கடந்த மாதம் விசாரணைக்கு வந்த அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், வரியை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தார்.


தனி நீதிபதியின் தீர்ப்பில் அதிருப்தியடைந்த நடிகர் விஜய் தன்மீதான விமர்சனத்தை நீக்க கோரியும், அவர் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதையடுத்து, கடந்த மாதம 27-ந் தேதி நடிகர் விஜயின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்தது. அதேசமயம், நடிகர் விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை ஒரு வாரத்தில் வணிகவரித்துறை கணக்கிட்டு சொல்ல வேண்டும் என்றும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், நடிகர் விஜய் மீதான தனி நீதிபதியின் விமர்சனத்தை நீக்குவது தொடர்பாக நான்கு வாரங்களுக்கு பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டனர்.






 

தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தனது தீர்ப்பில் வரி என்பது நன்கொடை ஒன்றும் அல்ல. அது கட்டாயமாக செலுத்த வேண்டிய ஒன்று என்றும் கூறினார். இதுதவிர, சமூகநீதிக்காக பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் நடிகர்கள் வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும், வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகத்திற்கு சமம் என்றும் உத்தரவிட்டு நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்தார்.