பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கருத்தை பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


‘தி கேரளா ஸ்டோரி’ படம்


இந்தியில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான படம் “தி கேரளா ஸ்டோரி”. விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ள இப்படத்தில் அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி, தேவதர்ஷினி என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு மே 5 ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில், அதற்கு சில நாட்கள் முன்பு ட்ரெய்லர் வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 


அதாவது  கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் லவ்ஜிகாத் என்னும் பெயரில் இஸ்லாம் மதத்திற்கு  மாற்றப்பட்டு, அவர்கள் ISIS அமைப்பில் சேருவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கேரள அரசு மட்டுமல்லாமல் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேசமயம் மேற்கு வங்க அரசு தி கேரளா ஸ்டோரிக்கு தடை விதித்தது.


இந்தியில் மட்டுமே வெளியான படம் 


பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே 32 ஆயிரம் பெண்கள் எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டு இப்படம் கடந்த மே 5 ஆம் தேதி வெளியானது. ஆனால் இந்தி மொழியில் மட்டுமே இந்தியா முழுவதும் இப்படம் வெளியானது. டப் செய்யப்பட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டிலும் தி கேரளா ஸ்டோரி படம் ரிலீசான தியேட்டர்கள் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் 2 நாட்களிலேயே படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் படத்துக்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு பாஜக ஆளும் சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இப்படியான சூழலில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு, படத்திற்கு தடை விதித்த மேற்கு வங்க அரசின் அரசாணையை ரத்து செய்தது. மேலும் தமிழ்நாட்டில்  தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் மாநில அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். 


ஆளுநர் ட்வீட்


இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படம் பார்த்தது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு ராஜ்பவன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தி கேரளா ஸ்டோரி” படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி: ஆளுநர் ரவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பலரும் ஆளுநரின் கருத்துக்கு  தங்கள் எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர்.