நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதங்கள் பற்றி காணலாம். 


வாரிசு படத்துக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் நாளை மறுநாள் (அக்டோபர் 19) ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி,  அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். 


இப்படம் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அதிகாலை 4 மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலளித்த அரசு,  நாள் ஒன்றுக்கு ஒரு சிறப்பு காட்சி சேர்த்து மொத்தம் 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்போடு, காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க வேண்டும். இரவு 1.30 மணிக்குள் காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. 


இதனைத் தொடர்ந்து சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அனிதா சுமந்த், ”லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 7 மணி காட்சி திரையிடலாமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு முடிவுக்கே விட்டு விடுகிறேன்” என தெரிவித்தார்.  இதுதொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுக்கவும் அறிவுறுத்தினார். இந்த விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் நொந்து போயுள்ளனர். 


4 மணி காட்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, 7 மணி காட்சியாவது கொடுக்க வேண்டுமென சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பல விஷயங்கள் முன்வைக்கப்பட்டது. அதில், “லியோ படம் 2 மணி நேரம் 43 நிமிடம் ஓடக்கூடியது என தெரிய வந்திருந்தால் நாங்கள் சிறப்பு காட்சிக்கே அனுமதி கொடுத்திருக்க மாட்டோம். வழக்கமான 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருப்போம். கடந்த பொங்கலன்று ஒரு படத்துக்கு (துணிவு) சிறப்பு காட்சி கொடுத்த நிலையில் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். லியோ ட்ரெய்லர் வெளியீட்டின் போது தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது. இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதால் இதனை கவனிக்க வேண்டியதும், ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியதும் மிக முக்கியமான ஒன்று” என தெரிவிக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி அனிதா சுமந்த், “ரசிகர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது. படம் வெளியாவதே ரசிகர்களின் விருப்பத்திற்காக மட்டும் தான். இதில் ரசிகர் ஷோ, பொதுமக்கள் ஷோ என பிரித்து பார்க்க முடியாது” என தெரிவித்தார்.