புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியதை இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “தயவு செய்து எங்கள் கட்சிக்கு யாரும் ஒட்டு போட வேண்டாம்.. உலகத்தில் முதல் முறையாக ஒரு கட்சி தலைவர் தன் கட்சி தொண்டர்களிடம் கெஞ்சி கோரிக்கை.. ஊரெல்லாம் கட்ட பஞ்சாயத்து பண்ண கட்சி இன்று கர்மா அதையே அவர்களுக்கு திருப்பி தருகிறது. பாதிக்கப்பட்ட பெத்தவங்க பாவம் சும்மா விடுமா. Karma Is boomerang” என தெரிவித்துள்ளார். இதற்கு விசிக தொண்டர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நடந்தது என்ன?

2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முன்னதாக அங்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுவதில் மிகுந்த சிக்கல் நீடித்தது. 

இதனால் தனக்கு செல்வாக்கு உள்ள நான்கு தொகுதிகளில் தனித்து களம் காண்பதாக கூறி திருமாவளவன் வேட்பாளர்களை அறிவித்தார். இதற்கிடையில் திமுக - காங்கிரஸ் இடையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அந்தக் கூட்டணியில் திருமாவளவனுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் அதனை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. 

இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியிடும் உழவர்களை தொகுதியில் மட்டும் விசிக தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே சமயம் ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். அவர்களுக்கு பதில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

இதனிடையை உழவர்கரை தொகுதியில் சார்பில் செல்வ புஷ்பலதா வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு சுயேட்சை சின்னமான கரும்பலகை ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமாவளவன் கேட்டுக் கொண்டது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.