தமிழ்நாட்டு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர் சிறு வயதில் வறுமையையும் பசியையும் எதிர்கொண்டதாக பேசினார். விஜயின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்தவர். அப்படியென்றால் விஜய் எப்படி வறுமையில் வளர்ந்திருக்க முடியும் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கியுள்ளன. விஜயுடன் பள்ளியில் படித்த அவரது நண்பர் ஒருவர் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்ற தவெக அட்சியமைக்க பெரும் சவால்களை எதிர்கொண்டது. இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிகவின் ஆதரவோடு நேற்று மே 10 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய். பதவியேற்றப் பின் விஜய் மக்களிடம் உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது அவர் 'சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்றிருந்த ஒரு சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளை நான். எனக்கு வாழ்க்கையில் வறுமை என்றால் பசி என்றால் என்னவென்று நன்றாகவே தெரியும். நான் ஒன்றும் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை என்று முதல்வராக பதவியேற்றப்பின் முதலமைச்சர் விஜய் பேசியிருந்தார்.
விஜயின் பள்ளி நண்பர் பதிவு
விஜயுடன் 3 ஆவது வகுப்பில் படித்த மனு ஜோசப் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் விஜயின் இந்த கருத்து குறித்து பதிவிட்டுள்ளார் . அதில் அவர் " தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஆற்றிய தனது முதல் உரையில், விஜய் தான் வறுமையில் வளர்ந்ததாகவும், பசி என்றால் என்னவென்று கூட தனக்குத் தெரியும் என்றும் கூறினார். இது சுத்தப் பொய், ஏனென்றால் அவர் லயோலா பள்ளியில் மூன்றாம் வகுப்பில் என் வகுப்புத் தோழனாக இருந்தார். அவருடைய தந்தை ஒரு திரைப்பட இயக்குநர், அவர் தன் மகனைத் திரைப்படத் துறைக்குத் தயார்படுத்தினார். பெரும்பாலான திரைப்பட இயக்குநர்களைப் போலவே அவருடைய தந்தைக்கும் பொருளாதார நெருக்கடிக் காலங்கள் இருந்திருக்கலாம், ஆனால் அது தமிழ் தரத்திலான வறுமைக்குச் சமமானதல்ல. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் பணமில்லாமல் இருப்பதையும் வறுமையையும் குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டும் மிகவும் வெவ்வேறான விஷயங்கள்." என அவர் பதிவிட்டுள்ளார்
