விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டார் என்பதற்காக தில் ராஜூ தேவையில்லாமல் பேசி வம்பிழுப்பதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வாரிசு திரைப்படமும் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் -அஜித் படங்கள் பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதும் நிலையில், ஏற்கெனவே இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் பனிப்போரைத் தொடங்கி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.


இச்சூழலில் திரையரங்குகள் கிடைப்பதில் வாரிசு திரைப்படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டார் என்றும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


“துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர்கள் தமிழ்நாட்டில் வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை. தியேட்டர்களை சம அளவில் பிரித்து தருவதாக  கூறுகிறார்கள். ஆனால், பல்வேறு தகவல்களின்படி விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். அதனால் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று உதயநிதியிடம் கேட்கப்போகிறேன்.  


அஜித்தின் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களை லாக் செய்துவிட்டு, வாரிசுக்கு போதுமான தியேட்டர்களை கொடுக்க மறுக்கின்றது. துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும். ஏனெனில் இது பிசினஸ்" என்று தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.


தில் ராஜூவின் ‘விஜய் தான் நம்பர் 1’ எனும் இந்தக் கருத்து அஜித் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி கடும் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டார் என்பதற்காக தில் ராஜூ தேவையில்லாமல் பேசி வம்பிழுப்பதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”தயாரிப்பாளர் தில் ராஜு ஹைதராபாத்தில் அமர்ந்துகொண்டு என்ன அர்த்தத்தில் இப்படி பேசுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. எந்த எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்பதும் தெரியவில்லை. விஜய்தான் நம்பர் 1 ஸ்டார் என்று தில்ராஜு கூறியுள்ளார். சினிமாவில் நம்பர் 1 ஸ்டார் கதைதான்.


பொதுமக்கள் நடிகர்களின் முகத்திற்காக தியேட்டருக்குச் செல்வது கிடையாது. தில் ராஜு ஆந்திராவில் உட்கார்ந்துகொண்டு, 'எனக்குதான் அதிக தியேட்டர்கள் கொடுக்க வேண்டும். விஜய்தான் நம்பர் 1 ஹீரோ' என்கிறார். எந்தக் கதை நன்றாக இருக்கிறதோ அதுதான் பெரிய ஸ்டார்.


விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டார் என்பதற்காக தேவையில்லாமல் பேசி இப்படி பிரச்னையை உருவாக்குகிறார். தில் ராஜு தேவையில்லாமல் வம்புக்கிழுக்கிறார் என்பதுதான் உண்மை" எனத் தெரிவித்துள்ளார்.