அனுமதியின்றி சிறப்புக் காட்சி


திரைப்படங்களின் வசூல் குறித்து தொடர்ச்சியான சர்ச்சைகளை ஏற்படுத்தி வருபவர் திருப்பூர் சுப்ரமணியம்.  சக்தி ஃபிலிம்ஸ் என்கிற திரையரங்கத்தை நடத்தி வரும் சுப்ரமணியம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்களின் சங்கத் தலைவர் பதவியை நிர்வகித்து வந்தார். சமீபத்தில் இவரது திரையரங்கத்தில் தீபாவளி அன்று காலை அனுமதியின்றி படங்களை திரையிட்டதாக புகார் வந்திருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் நேரடி ஆய்வு செய்து அந்த அறிக்கையை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்தார். அனுமதி அளிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக படங்கள் திரையிடப் பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது, இதனைத் தொடர்ந்து  இதுதொடர்பான விளக்கமளிக்கக் கோரி திருப்பூர் சுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


பதவியை ராஜினாமா செய்த திருப்பூர் சுப்ரமணியம்


இதனை அடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் சுப்ரமணியம்  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கம் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார் திருப்பூர் சுப்ரமனியம். தனது சொந்த வேலைகள் காரணமாக இந்த பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக கூறி தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அவர்.


லியோ சர்ச்சை


கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும்  செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படம் தியேட்டரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோவாக “தளபதி” விஜய்யும்,  ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்தார். லியோ படத்தின் வசூல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் திருப்பூர் சுபரமணியம் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.


“லியோ படம் நான் இன்னும் பார்க்கவில்லை. வெளியூர் சென்றிருந்தேன். பெரிய அளவுல வசூல் ஆகிட்டு இருக்கு. முதல் நாள் வசூல் ரூ.148.5 கோடி என சொல்லப்பட்டாலும் லியோ படம் தியேட்டர்காரர்களுக்கு லாபமான படமாக அமையவில்லை. என்ன காரணம் என்றால், இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத பங்குத்தொகை கேட்டு வாங்கியுள்ளார்கள். நிறைய தியேட்டரில் படம் கடைசி நிமிடம் வரை திரையிடப்படவில்லை. பெரும்பாலான தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சியாக இப்படத்தை ரிலீஸ் செய்யவில்லை. படம் பெரிதாக வசூல் செய்தாலும் எங்களுக்கு பெரிதாக லாபம் இல்லை. இதில் நஷ்டம் என்பது இல்லை என்றாலும் எங்களுக்கு போதுமானதாக இல்லை” என்று அவர் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது