லியோ படத்தை வேறு வழியில்லாமல் திரையிட்டுள்ளதாகவும், இதில் எங்களுக்கு லாபம் இல்லை எனவும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும்  செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படம் தியேட்டரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோவாக “தளபதி” விஜய்யும்,  ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்தார். 


இந்த படம் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்து ரிலீசானது. அதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனம் அதிகப்படியான பங்குத்தொகை கேட்டதால் கடைசி நிமிடம் வரை பல தியேட்டர்கள் லியோ படத்தை திரையிட முன்வரவில்லை. வழக்கமாக 70% பங்குத்தொகை வழங்கப்படும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு 80% பங்குத்தொகை கேட்கப்பட்டது. இதனால் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுவதற்கு சில மணி நேரம் வரை முன்பதிவு சில தியேட்டர்களில் தொடங்கப்படாமல் இருந்தது. 


இதனிடையே லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேர்காணல் ஒன்றில் லியோ படம் ரிலீஸ் பற்றி தாறுமாறு விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், “லியோ படம் நான் இன்னும் பார்க்கவில்லை. வெளியூர் சென்றிருந்தேன். பெரிய அளவுல வசூல் ஆகிட்டு இருக்கு. முதல் நாள் வசூல் ரூ.148.5 கோடி என சொல்லப்பட்டாலும் லியோ படம் தியேட்டர்காரர்களுக்கு லாபமான படமாக அமையவில்லை. என்ன காரணம் என்றால், இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத பங்குத்தொகை கேட்டு வாங்கியுள்ளார்கள். நிறைய தியேட்டரில் படம் கடைசி நிமிடம் வரை திரையிடப்படவில்லை. 


பெரும்பாலான தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சியாக இப்படத்தை ரிலீஸ் செய்யவில்லை. படம் பெரிதாக வசூல் செய்தாலும் எங்களுக்கு பெரிதாக லாபம் இல்லை. இதில் நஷ்டம் என்பது இல்லை என்றாலும் எங்களுக்கு போதுமானதாக இல்லை. கேரளாவில் 60% வாங்குபவர்கள், தமிழ்நாட்டில் 80% பங்குத்தொகை வாங்குகிறார்கள். தமிழ் தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தால் இவர்கள் அதனை பயன்படுத்தி இஷ்டத்துக்கு செய்தார்கள். லியோ படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால் இப்போது கிடைத்திருக்கும் தியேட்டர்களில் பாதி தான் கிடைத்திருக்கும். 


அடுத்த 17 நாட்களுக்கு வேறு படமே இல்லை. அதனால் லியோ திரையிடப்பட்டுள்ளது. இதே செவன் ஸ்க்ரீன் நிறுவனம் கொரோனா காலக்கட்டத்தில் மாஸ்டர் படத்தை ரீலிஸ் செய்த போது நாங்களே முன்வந்து 80% பங்குத்தொகை தருகிறோம் என சொல்லி தியேட்டர்களை கொடுத்தோம். இனிமேல் எந்த படத்துக்கும் கேட்காதீர்கள் என சொன்னோம். ஆனால் மாஸ்டரை விட இந்த படத்துக்கு அதிகமாக கேட்டார்கள். 


ஒருவேளை லியோ படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு கொடுத்திருந்தால் இப்படத்திற்கு பிரச்சினை வந்திருக்காது. இஷ்டப்பட்டால் போடுங்கள், இல்லைன்னா விடுங்க என சொல்கிறார்கள். நாங்க 4 மணி ஷோ எல்லாம் கேட்கவில்லை. அரசும், நாங்களும் அதை விரும்புவதில்லை. என்னதான் கூடுதல் காட்சி போட்டாலும் 80% ஷேர் எடுத்துக் கொள்வதால் லாபமே இல்லை” என தெரிவித்துள்ளார்.