திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நள்ளிரவில் டிக்டாக் பிரபலத்திடம் காவல்துறையினர் மல்லுக்கட்டிய நிலையில் காவல்துறை உயரதிகாரிக்கு அனுப்பிய வீடியோவால், பரபரப்பு ஏற்பட்டது. அப்படி என்னதான் நடந்தது நள்ளிரவில் விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரில் வசித்து வருபவர் டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி. இவர் சமீபத்தில் மதுரையில் மற்றொரு டிக்டாக் பிரபலமான சிக்கந்தர் என்பவரை சாலையில் வைத்து செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை போலீசார் மணப்பாறைக்கு வந்தும் விசாரணை நடத்திச் சென்றனர்.இதற்கிடையில் தான் நேற்று சூர்யா தேவி மதுரை போலீஸ் உயரதிகாரிக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தன்னுடைய பிள்ளைகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி ஒரு வீடியோ அனுப்பி இருந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் மதுரை போலீஸ் உயரதிகாரி, திருச்சி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் பிருந்தா தலைமையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று இரவு காந்தி நகரில் உள்ள சூர்யாவின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டின் உள்பகுதி பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசார் கதவை தட்டிப்பார்த்து, காலிங் பெல் அடித்துப் பார்த்தும் திறக்காத நிலையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே உடனே மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து போலீசார் உள்ளே சென்று பார்த்த போது அறையில் சூர்யா தேவி அசந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை எழுப்பி விசாரித்துள்ளனர். அதில் தான் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி மின்விசிறியில் வேஷ்டியை தூக்கு போடுவது போல் மாட்டி வைத்திருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் போலீசார் சூர்யா தேவிக்கு இதுபோன்ற செயல்களில் எல்லாம் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அருகில் உள்ள தாத்தாவிடம் ஒப்படைத்து விட்டு நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் நள்ளிரவில் திரண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதுபோன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டாலும் தவறுகள் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சூர்யா தேவியிடம் காவல்துறையினர் எச்சரிக்கைவிடுத்தும் அறிவுரை வழங்கும் சென்றனர்.