நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை முன்னிட்டு வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 






விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. 






மேலும் வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து ஏற்கனவே காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம் ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என கூறப்பட்டது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் நடைபெறாத வகையில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக விழா நடத்தப்படவுள்ளது. 






இதற்காக போடப்பட்ட செட்டின் புகைப்படம் நேற்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கான டிக்கெட் பார்ட்னராக டிக்கெட் நியூ நிறுவனம் இணைந்துள்ளதாக வேல்ஸ் ஃபிலிம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் டிக்கெட் தேவைப்படுபவர்கள் இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.