போனி கபூர் - ஹெச். வினோத் - அஜித் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது கூட்டணியில் முன்னதாக வெளியான வலிமை திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப்படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.


இந்நிலையில் இன்று ட்ரைலர் ரிலீசாகியுள்ள நிலையில், ட்ரைலரில் அஜித் இதுவரை நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு புதிய லுக்கில் காணப்படுகிறார். மேலும், இந்த ட்ரைலர் பார்ப்பதற்கு நெட் ஃப்ளிக்ஸில் வெளியான மணி ஹைஸ்ட் போல இருப்பதாகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல், மணி ஹைஸ்ட் கதை உலக அளவில் மிகவும் பிரபலமான கதை என்பதால், படத்தின் ஒன் லைன் மட்டும் வங்கிக் கொள்ளை சம்பந்தமாக இருக்கும் எனவும், கதையோட்டம் மற்றும் திரைக்கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.  






துணிவு படத்தின் ட்ரெயிலரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.






இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், படத்தில் இருந்து ‘சில்லா சில்லா’ ‘காசேதான் கடவுளடா’ ‘கேங்ஸ்டா’ ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.






முன்னதாக நேரு ஸ்டேடியத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து, விஜய் ரசிகர்கள் குஷியாகினர், இந்த நிலையில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் துணிவு படக்குழு இன்று இரவு 7 மணிக்கு துணிவு படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைதொடர்ந்து நேற்று படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியிட்ட படக்குழு, அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் வெளியிடாமல்  சஸ்பென்ஸ் வைத்திருக்கிறது. ட்ரெய்லரில் அவரது பெயர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது . இதனால் இன்று காலை முதலே அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் ட்ரெய்லரை எதிர்நோக்கி காத்திருந்தனர்.  அதேப்போல் தற்போது துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.


இந்தப்படத்துடன் நடிகர் விஜய்யின் ‘வாரிசு’திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.