நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பின் இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார்- தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள துணிவு படம் நேற்று முன்தினம் (ஜன.11) வெளியானது.


துணிவு:


ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில் சமுத்திரகனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம், ஜான் கொக்கைன், அஜய் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். ஜிப்ரான் இசையில் பொங்கல் ரிலீசாக வெளிவந்துள்ள துணிவு, கடந்த இரண்டு நாள்களாக வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


முதல் 3 நாள் வசூல்


கிரெடிட் கார்டு, வங்கி மோசடி என பல்வேறு விஷயங்கள் தொடர்பான மோசடிகளை வெளிக்கொணரும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் மங்காத்தாவுக்கு பிறகு அஜித்தின் க்ரே கதாபாத்திரம் என அவரது ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைந்துள்ளது.


இந்நிலையில் துணிவு படத்தின் முதல் மூன்று நாள்கள் வசூல் நிலவரம் முன்னதாக வெளியாகியுள்ளது.


அதன்படி முதல் நாள் உலகம் முழுவதும் 28.6 கோடி ரூபாய் வசூலித்த துணிவு படம் அடுத்தடுத்த நாள்களில் 13.8 கோடி, 9.75 கோடி எனக் குறைந்தது.


வெளிநாடுகளில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், முதல் மூன்று நாள்களில் உலகம் முழுவதும் மொத்தம் 66.15 கோடி ரூபாய் துணிவு வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


 






இன்று முதல் பொங்கல் விடுமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் வரும் நாள்களில் அதிகமாக வசூலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மனம் திறந்த போனி கபூர்


அஜித்துக்கும் தனக்கும் இடையேயான உறவு குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:


”அஜித்தின் ரசிகர்கள் காட்டும் அன்பு அசாத்தியமானது. அவரது நேர்மையான ரசிகர்கள் அஜித்துக்கு அளிக்கும் பெருமையின் பிரதிபலிப்பிலிருந்து நானும் அன்பைப் பெறுகிறேன். நான் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். அஜித்துடன் பணிபுரிந்தற்கு மகிழ்கிறேன், அஜித்துடன் மூன்று படங்கள் பணிபுரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


நான் ஒரு சில இடங்களுக்காக பயந்தேன். ஆனால் ரசிகர்கள் படத்தை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். அஜித்தின் ஸ்டைல் , மேனரிசம், நடிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்துக்கும் நன்றி. மும்பையில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்துக்கு அதிகாலை 3 மணி ஷோ ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது என்றால் அது துணிவு தான்” என்றார்.


துணிவு பெயர் அஜித்துக்கு பொருந்தும்


ஊடக வெளிச்சத்தை விரும்பாத அஜித் எப்படி தொடர்ந்து ரசிகர்களால் இப்படி ஆராதிக்கப்படுகிறார் என்ற கேள்வி போனி கபூரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”அஜித்தின் நட்சத்திர மதிப்பு அவரது நடிப்பு, பண்பு, பெர்சனாலிட்டி அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாகியுள்ளது என நான் கூறுவேன்.


அஜித் யாரையும் பார்க்க மாட்டார், பேச மாட்டார், இசை வெளியீட்டுக்கு வர மாட்டார், பட ப்ரொமோஷன்களுக்கு வர மாட்டார், ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை அனைத்து நடிகர்களுக்கும் இது முக்கியம். ஆனால் இவற்றிலிருந்து அவர் விலகியே இருப்பார்.


பயமறியா அஜித்:


ஆனாலும் அவரது படத்துக்கு ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான ஓப்பனிங் கிடைக்கிறது. அவரிடம் ஏதோ ஒன்று இருக்கறது, அவர் ஏதோ ஒன்றை சரியாக செய்கிறார். நேர்கொண்ட பார்வை கதையை நான் தமிழில் எடுக்க ஆசைபட்டபோது அஜித்தும் அதே போன்ற கதையில் நடிக்க விரும்புவதாகக் கூறினார். தனது கரியரின் முக்கியமான நேரத்தில் நேர் கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு பெரும் துணிவு வேண்டும்.


துணிவு என்ற தலைப்பு அஜித்துக்கு முற்றிலுமாக பொருந்தும். அவர் பயம் அறியாத நபர்” என போனி கபூர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.