நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 


நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பின் இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார்- தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “துணிவு”. ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம், ஜான் கொக்கைன், அஜய் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படம் பொங்கல் வெளியீடாக நேற்று வெளியானது. 


அதேசமயம் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் நேற்று வெளியானதால் சமமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையில் துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது.   கவுண்டர்களில்  வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் வெளிசந்தையில் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என விற்கப்பட்டது.  முதல் காட்சிக்காக டிஜே, செண்டை மேளம் என தியேட்டர் வளாகங்கள் களைக்கட்டியது. 






முதல் நாளில் படம் பார்த்த ரசிகர்கள் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணி ஒரு வழியாக ஹிட் கொடுத்து விட்டதாக மகிழ்ச்சியில் உள்ளனர். ஸ்டைலிஷான அஜித்தையும், சமூகத்தில் நடக்கும் குற்றத்தையும் சொல்லி அனைத்து ரசிகர்களையும் துணிவு படம் கட்டிப்போட்டு விட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் சென்னை வெற்றி தியேட்டரில் படம் பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர் ரசிகர்களின் கொண்டாட்டங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 


துணிவு படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இதனால் வாரிசு படத்தை விட துணிவுக்கு அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஜனவரி 17 ஆம் தேதி வரை பெரும்பாலான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் தீர்ந்து விட்ட நிலையில், முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


அதன்படி தமிழ்நாட்டில் ரூ.18 கோடியும்,  கர்நாடகாவில் ரூ.3.50 கோடி, ஆந்திரா-தெலங்கானாவில் ரூ 2.50 கோடியும், கேரளாவில் ரூ.1.50 கோடியும், பிற இடங்களில் ரூ.50 லட்சம் என 26 கோடி வசூல் வாரிக் குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.