தக் லைஃப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


மணிரத்னம் - கமல்ஹாசன் என  சினிமா உலகின் இரு ஜாம்பவான்கள் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள திரைப்படம் தக் லைஃப். கமல்ஹாசனின் 234ஆவது திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் உருவாகும் நிலையில்,  த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி,  ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. 


 ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், ஜன.24ஆம் தேதி தொடங்கிய  'தக் லைஃப்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு,  ஜன.31ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானது. கமல்ஹாசனுடன் அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில் தற்போது தக் லைஃப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி மார்ச் மாதம் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும், கமல்ஹாசன் - ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


சைபீரியாவில் லொகேஷனுக்கான தேடுதல் வேட்டையில் முன்னதாக படக்குழு ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அங்கு லொகேஷன் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்த படக்குழுவையும் கொண்டு படத்தின் க்ளைமேக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளை செர்பியாவில் படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக தக் லைஃப் படப்பிடிப்புக்கான லொகேஷன் பார்ப்பதற்காக இயக்குநர் மணிரத்னம் செர்பியா சென்றிருப்பதாகத் தகவல் வெளியானது. இதனை அடுத்து அமெரிக்கா சென்றுள்ள கமல் அங்கிருந்து செர்பியா சென்றடைவார் என்றும் தகவல் வெளியானது. மேலும் ரஷ்யாவில் பனி சூழ்ந்த மலைப்பகுதியில் மணிரத்னம், இணை தயாரிப்பாளர் செல்வா இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபியும் இணையத்தில் வைரலானது.


 






கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினைத் தயாரிக்கின்றன.