கமல்ஹாசன்


கமலின் 234 ஆம் படமாக உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முன்னதாக ஜெயம் ரவி , துல்கர் சல்மான் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் இருவரும் படத்தில் இருந்து விலகி சிலம்பரசன் மற்றும் அசோக் செல்வன் படப்பிடிப்பில் இணைந்தார்கள். இவர்கள் தவிர்த்து த்ரிஷா , அபிராமி , ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். டெல்லி , சென்னை , புதுச்சேரி , சைபீரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமலின் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான லுக்கில் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


அட்லீ படத்தின் லுக்கில் கமல்ஹாசன்






தக் லைஃப் படத்திற்கு பின் கமல்ஹாசன் அட்லீ இந்தியில் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சல்மான் கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அவரது இந்த புதிய லுக் அட்லீ படத்திற்காக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.  இது குறித்த் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 


அட்லீ படம் தவிர்த்து கமல் பிரபாஸ் நடிக்க இருக்கும் கல்கி 2 ஆம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படமும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது