தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா ஒரே பாட்டால் தனது கேரியரை தொலைத்த கதையை பற்றி காணலாம்.
தமிழில் “உனக்கு 20 எனக்கு 18” படத்தில் 2வது ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், ஜெயம் ரவி நடித்த மழை படம் தான் முன்னணி ஹீரோயினாக ஸ்ரேயாவுக்கு முதல் படமாக அமைந்தது. அப்படத்தில் இடம்பெற்ற மழை படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து தனுஷூடன் “திருவிளையாடல் ஆரம்பம்” படத்தில் நடித்த அவருக்கு 3வது படமே சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக “சிவாஜி தி பாஸ்” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் சினிமாவே அன்றைய காலக்கட்டத்தில் ஸ்ரேயா மீது பொறாமை கொள்ளும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது. ரஜினி படத்தை தொடர்ந்து விஜய்யுடன் “அழகிய தமிழ் மகன்” படத்திலும், விக்ரமுடன் “கந்தசாமி” படத்திலும் ஜோடி போட்டார். இப்படியாக இருந்த ஸ்ரேயா இன்று குடும்ப வாழ்க்கைக்கு மாறிவிட்டாலும் அவரது சினிமா வாழ்க்கையை ஒரே ஒரு பாட்டு தலைகீழாக மாற்றி விட்டது.
2008 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்த “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” படம் வெளியானது. இந்த படத்தில் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த படத்தில் ஸ்ரேயா ஆட வந்ததே தனிக்கதை.
நேர்காணல் ஒன்றில் பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், “பல கோடி ரூபாய் செலவு செய்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் படம் எடுத்துக் கொண்டிருந்தோம். காட்சிகளை எடிட் பண்ணி பார்த்தால் எடிட்டர் மெல்லமாக சார் படத்தில் காமெடியே இல்லை என காதை கடிக்கிறான். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. காமெடி படத்தில் காமெடி இல்லை என்றால் எப்படி என இது தொடர்பாக வடிவேலுவை அழைத்து பேசினேன். அவரோ, "முதலாளி கவலையே படாதீங்க. இந்திரலோகம் எமலோகம் பூலோகம் என 3 லோகம் இருக்கிறது. இதில் எமலோகத்தில் காமெடி வைத்து விடலாம்" என தெரிவித்தார். அதற்காக கோடி கணக்கில் செலவு செய்து செட் போட்டோம். எல்லாம் பண்றாங்க. மீண்டும் எடிட் செய்து பார்த்தால் காமெடி இல்லை.
அதனால் பெரிய அளவில் படம் ஓடாது என தெரிந்து விட்டது. பூலோகம் தொடர்பான காட்சிகள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரத்தில் ஷூட் செய்யப்பட்டது. சரி படத்தின் இமேஜை உயர்த்திவிட்டதாக நினைத்து டான்ஸ் ஆடுவதற்காக ஸ்ரேயாவிடம் கேட்டேன். அவருக்கு கால்ஷீட் பார்த்த சதீஷ் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர், என்னிடம் வாக்கு கொடுத்து விட்டேன். அதனால் வந்து டான்ஸ் ஆடி கொடுக்குமாறு ஸ்ரேயாவை சம்மதிக்க வைத்து விட்டார்.
அந்த சமயம் விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா நடித்துக் கொண்டிருந்தார். எல்லோரும் ஸ்ரேயாவுக்கு போன் பண்ணி வடிவேலு படத்தில் ஆடினால் உன்னுடைய இமேஜ் போய்விடும் என பயமுறுத்துகிறார்கள். காசை கையில் வாங்கி விட்டேன் நான் டான்ஸ் ஆடி முடித்து விட்டு தான் வருவேன் என ஸ்ரேயா கறாராக சொல்லி விட்டார்” என தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இந்த பாட்டுக்கு பின்னால் ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. அடுத்த 7 வருடத்தில் தமிழில் 5 படங்களில் மட்டுமே ஹீரோயினாகவும், 5 படங்களில் கேமியோ ரோலிலும் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.