சென்னை விமான நிலையத்தில், தந்தையை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு  வீடு திரும்பிய பொழுது  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர்  உயிரிழந்த நிலையில் ஒருவர்  ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்


 கணவரை வழி அனுப்ப


கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீத். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பி உள்ளார்.  விடுமுறையை முடித்துவிட்டு  , மீண்டும் சவுதிக்கு செல்வதற்காக பண்ருட்டியில் இருந்து தனது குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். இதனை அடுத்து குடும்பத்தினர் அப்துல் சமத்தை சென்னை விமான நிலையத்தில்,  வழி அனுப்பி விட்டு  மீண்டும் அவர்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பியுள்ளனர்.


 


 அதிவேகமாக மோதிய கார்


காரை ஓட்டுநர் சரவணன் ( 50 ),  அப்துல் சமத்  மனைவி  ஜெய் பினிஷா ( 40 ),  அவரது மகன்கள்   மிக்சால் (20),  பைசல் ( 12 ) மற்றும் மற்றொரு மகன் அத்தல் ( 16 )  ஆகியோர் காரில் வந்துள்ளனர்.  இந்தநிலையில் , செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம்  பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,  திருச்சி மார்க்கமாக வந்து கொண்டிருந்த பொழுது, சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சென்னையில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற லாரியில் பின்பகுதியில் கார் அதிவேகமாக மோதி உள்ளது.


 நான்கு பேர் உயிரிழப்பு


கார் மோதிய அடுத்த நொடியே  கார்  லாரியின்   பின்னால் சிக்கி அப்பளம் போல் நொறுங்கி உள்ளது.  இந்த கொடூர விபத்தின் காரணமாக காரில் பயணம் செய்த  கார் ஓட்டுநர் சரவணன் பினிஷா, மிக்சால்  , பைசல்  ஆகியோருக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.   இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற,  வாகன ஓட்டிகள் இதுகுறித்து காவல்துறையினருக்கும் மற்றும் 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர்.


 


 மீட்பு பணிகள்


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அத்தல் ( 16 )  அந்த சிறுவனை மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி   மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  கார் அப்பளம் போல் நொறுங்கி இருந்ததால் மீட்பு பணியில்  தாமதம் ஏற்பட்டது.  பொதுமக்கள் மற்றும் மற்றும் தீயணைப்புத் துறையினர்   உதவியுடன் உடல்கள் மீட்க பட்டு,  உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொடூர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்   உட்பட நான்கு பேர் உயிரிழந்திருக்கும், சம்பவம் அதிர்ச்சியையும் அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது  


 


 இரவில் தொடரும் கொடூரம்


அவ்வப்பொழுது மதுராந்தகம் புறவழிச் சாலையில் இரவு நேரங்களில் தொடர்ந்து அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்று வருவது தொடர்கதை ஆகியுள்ளது.  குறிப்பாக மதுராந்தகம் பகுதியில்  வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் இதுபோன்ற விபத்துகள்  தொடர்ந்து நடைபெறுகிறது. இதே போன்று நேற்று இரவு கல்பாக்கம் அருகே நடைபெற்ற கார் விபத்தில், பாண்டிச்சேரிக்கு சென்று  சென்னை திரும்பிய  ஐந்து பேரும் பலியானார்கள். இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில்  அடுத்த சில மணி நேரங்களில் நடைபெற்ற மற்றொரு விபத்தில் நான்கு பேர் பலியாகி இருப்பது,  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.