தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம், அரபி என உலக அளவில் எந்த ஒரு மொழி படமாக இருந்தாலும் வெள்ளிக்கிழமைகளில் படங்களை ரிலீஸ் செய்வதே ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. படம் சூப்பர் ஹிட் வெற்றி பெரும் அல்லது ஃபிளாப்பாகும் என்பது எல்லாம் இதற்கு அடுத்த படி தான்.
சிலருக்கு விதிவிலக்கு :
ஒரு சில ஸ்டார் ஹீரோ படங்கள் இதற்கு விதிவிலக்காக மற்ற நாட்களில் வெளியாகும். ஏனெனில் அவர்களின் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்பதால் படம் எந்த நாளில் வெளியானாலும் அதில் எந்த ஒரு சிக்கலும் வராது. ஒரு சிலரோ அஷ்டமி, நவமி என சென்டிமென்ட் பார்த்து படங்களை ரிலீஸ் செய்யும் வழக்கமும் உண்டு. இவை அனைத்தும் விதிவிலக்கு என்றாலும் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தான் புதிய படங்கள் திரையரங்கில் வெளியாகும்.
ரசிகர்களுக்கு ஏமாற்றம் :
திரை ரசிகர்கள் மத்தியில் இந்த வாரம் என்ன திரைப்படம் வெளியாக போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். வார இறுதி நாட்கள் என்பதால் டிக்கெட் முன்பதிவுகளை முன்னரே செய்து வைத்து ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆனால் பல மாதங்களுக்கு பிறகு இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் இதற்கு பின்னணியில் வேறு ஒரு காரணமும் உள்ளது.
பட்டையை கிளப்பும் ஜெயிலர் :
கடந்த வாரம் ஆகஸ்ட் 10ம் தேதி வியாழன் அன்று நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசத்தலான கம் பேக் கொடுத்துள்ள திரைப்படமான 'ஜெயிலர்' உலகெங்கிலும் உள்ள திரையரங்குளில் வெளியானது. மிகவும் பிரமாண்டமான ஓப்பனிங்கை இப்படம் பெற்றுள்ளதால் திரையரங்குகள் எங்கும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் நிரம்பி வழிகிறது. அதனால் இந்த வாரம் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ் வேட்டை :
கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
வெளியான ஒரே வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூலித்த படம் என்ற பட்டியலில் முன்னணி இடத்தை ஜெயிலர் பிடித்துள்ளது எனக் கூறப்படுகிறது. பல நாட்களாக பழைய சூப்பர் ஸ்டாரின் மாஸான படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையில் புதிய வரவுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.