சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.




கிருஷ்ணகிரியில்  இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி வந்த தனியார் ஆம்புலன்ஸ், காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பெரும்புலி பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது, ஆம்புலன்ஸ் முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணித்த நோயாளி உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.


இந்த சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு மாற்று ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும்  விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.




ஆம்புலன்ஸை அப்புறப்படுதிக் கொண்டிருக்கும் வேலையில், திடீரென ஆம்புலன்ஸின் முன் பகுதி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீ மல மலவென பரவி ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரும் வெடித்த காரணத்தால் ஆம்புலன்ஸ் முழுவதும் பீஸ் பீஸ் ஆக சிதறியது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து உரு குலைந்து போன ஆம்புலன்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த விபத்தின் காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 இது ஒருபுறம் இருக்க,  புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா நேற்று இரவு அவரது காரில் புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி திருமயம்-மதுரை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமயம் புதிய கோர்ட்டு பகுதியில் கார் சென்றபோது எதிரே வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த நீதிபதி மற்றும் அவரது கார் டிரைவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதையடுத்து, அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நீதிபதி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ் (வயது 29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.