தமிழ் சினிமா வட்டாரத்தில் சிறப்பான புரிதல் கொண்ட ஜோடியாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் - அவர் மனைவி லதா ஆகியோரது காதல் கதை மிகவும் அழகானது. அந்த காதல் எப்படி கைகூடியது தெரியுமா?
உலகளவில் உள்ள ரசிகர்களை தலைவா என கொண்டாட வைத்த நடிகர் ரஜினிகாந்த், இன்றும் தனது ஸ்டைலிஷான தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளார். இது வரையில் 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது வெற்றி, புகழ் அனைத்தையும் தனது மனைவி லதாவுக்கே அர்ப்பணித்துவிட்டார். இவர்களுக்குள் இருக்கும் இந்த மெச்சூர்டான காதலின் தொடக்கப்புள்ளி எது?
கண்டதும் காதல் :
சென்னை, எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்று வந்த லதா தன்னுடைய கல்லூரி இதழுக்காக நடிகர் ரஜினிகாந்தை, தில்லு முல்லு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று பேட்டி எடுத்தார். கண்டதும் லதா மீது காதல் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். இது எப்படி சாத்தியமாகும் எனத் தயக்கம் இருந்தது. லதாவிடம் ரஜினி தன்னுடைய காதலை ப்ரபோஸ் செய்யவே இல்லையாம்.. நேரடியாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகத் தெரிவித்துவிட்டாராம்! அதற்கு லதா அவரின் பெற்றோரின் சம்மதத்தைப் பெற வேண்டும் என கூறிவிட்டாராம்.
தூது சென்ற ஒய்.ஜி. மகேந்திரன் :
லதாவின் பெற்றோரை எப்படி அணுகி காதலுக்கு சம்மதம் வாங்குவது என மிகவும் யோசித்த சமயத்தில் தான், லதாவின் தங்கை கணவரான ஒய்.ஜி. மகேந்திரனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் தான் ரஜினி - லதா திருமணம் நடைபெற காரணமாக இருந்தவர்.
இருவருக்கும் 1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமணம் நடைபெற்றது. பாரம்பரிய முறையில் தென்னிந்திய கலாச்சாரத்தின்படி அவர்களின் திருமணம் நடைபெற்றது.
அன்று போலவே இன்றும் மனைவி மீது மிகுந்த அன்பும் காதலும் கொண்டுள்ளார் ரஜினிகாந்த். தன்னுடைய உடல் நலம் மற்றும் வாழ்க்கைமுறைக்கு பக்கபலமாய் உறுதுணையாய் இருந்தவர் மனைவி தான் என்பதை பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய நடிப்பு திறமையால் இந்த உலகையே வெல்லும் பயணத்தில் ரஜினி இருந்த போதிலும், அவருக்கு ஆதரவாக என்றுமே லதா இருந்துள்ளார். இன்றும் ரஜினியின் உடல் பிட்டாக இருக்க முக்கியமான காரணம் அவரின் மனைவி தான்.
மோசமான லைஃப்ஸ்டைல்:
திருமணத்துக்கு முன் குடி, சிகரெட் பிடிப்பது, தினசரி மட்டன் என கட்டுக்கோப்பற்ற வாழ்க்கை முறையை ரஜினி பின்பற்றி வந்துள்ளார். திரை நட்சத்திரமாக மாறிய பிறகு அவை மேலும் அதிகரிக்க, திருமணத்துக்குப் பின் கட்டுக்கோப்பாக அவரை மாற்றியவர் லதா.
இந்த தம்பதியினருக்கு 1982ஆம் ஆண்டு மூத்த மகள் ஐஸ்வர்யாவும், 1984ஆம் ஆண்டு இளைய மகள் சௌந்தர்யாவும் பிறந்தார்கள்.
அன்றும் இன்றும் என்றும் நாம் சூப்பர் ஸ்டாராக கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் முதுகெலும்பாக இருந்து அவரை வழிநடத்துகிறார் அவரின் அன்பான மனைவி லதா ரஜினிகாந்த்.