திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தமிழகத்தில் தோராயமாக 39.58 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழில் மாறன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தனது 44-வது படமான, திருச்சிற்றம்பலம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த திரைப்படத்தை தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார். இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் :
இந்த படத்தில் நடிகை ராஷிகன்னா அனுஷா கதாபாத்திரத்திலும், நித்தியா மேனன் சோபனா கதாபாத்திரத்திலும், நடிகை பிரியா பவானி சங்கர் ரஞ்சனி கதாபாத்திரத்திலும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதேபோல், நடிகர் பிரகாஷ் ராஜ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும், இயக்குநர் பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் சன் பிக்சர்ஸ் அறிமுகம் செய்தது இதையடுத்து திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியான நிலையில் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வெற்றிநடை போட்டு வருகிறது திருச்சிற்றம்பலம்.
படம் பார்த்த பலரும் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி என பாராட்டியுள்ளதோடு, படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் பேமிலி ஆடியன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் ரிலீசானதை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் காமராஜ் தலைமையிலான தனுஷ் ரசிகர்கள் ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி ஊழியர்கள் 50 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது