கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படத்தின் மூலமாக இந்தியா முழுவது புகழடைந்த நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. நேற்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நாம் அவரைப் பற்றி அறிந்தது எல்லாம் காந்தாரா படத்தின் வழியாகத்தான். அதனால் அவரது பிறந்தநாளன்று அவரைப் பற்றிய சில அரியத் தகவல்களை அறிவோம்.
ரிஷப் ஷெட்டியின் நிஜப் பெயர்
ரிஷப் ஷெட்டியில் நிஜப் பெயர் பிரஷாந்த். நியூமராலஜிபடி தனது பெயரை மாற்றிக்கொண்டார் ரிஷப். பேட்டி ஒன்றில் இதுகுறித்து அவர் பேசியபோது “நான் அப்போது படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தேன். எனது நண்பர் அப்போது தான் எனக்கு இந்த யோசனையை சொன்னார். நியூமராலஜியின் படி அவர்தான் எனக்கு பிரஷாந்த் என்கிற என் பெயரை ரிஷப் என்கிறப் பெயரைத் தேர்வு செய்தார்.’ என்று கூறியிருக்கிறார்.
பெங்களூருவின் அரசுத் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கத்திற்கான டிப்ளமாவை முடித்தார் ரிஷப் ஷெட்டி
இன்று பிரபலமாக அறியப்படும் ரிஷப் ஷெட்டி எந்த வித பெரிய குடும்பத்தையும் சார்ந்தவர் இல்லை. தனது பொருளாதார நிலையை சமாளித்துக்கொள்ள மினரல் வாட்டர் சப்ளை செய்வது, ஹோட்டல்களில் பணிபுரிவது என பல வேலைகள் செய்திருக்கிறார் ரிஷப்
துக்ளக், உள்ளிடவரை கண்டண்டே ஆகிய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி தனது முதல் படமாக ரக்ஷித் ஷெட்டி நடித்த ரிக்கி என்கிற படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்குப் பின் ரக்ஷித் ஷேட்டியின் நெருங்கிய நண்பரானார் ரிஷப் ஷெட்டி. ரிஷப் ஷெட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி திரைப்படம் கன்னடத் திரைப்படத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கர்னாடகத்தின் பாரம்பரிய நாடகக் கலையான யக்ஷகானா என்கிற கலையை முறையாக பயின்றவர் ரிஷப் ஷெட்டி. அவரது படங்களின் மூலமாக இந்தக் கலையின் மேல் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற பூத கோலா என்கிற நடனத்தை அவர் எடுத்திருந்த விதத்தில் அவரது திறமையை மதிப்பிடலாம்.
ரிஷப் ஷெட்டிக்கும் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், தனது படங்களில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு டூப் போடுவதில் உடன்பாடு இல்லாதவர்கள் இருவரும். காந்தாரா படத்தில் இறுதிக்காட்சியில் நடிக்கும் போது தனது இரண்டு தோள்பட்டைகளையும் முறித்துக் கொண்டிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
மேலும் இன்று தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது ரசிகர்களையும் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ரிஷப்ஷெட்டி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷப் ஷெட்டி.