எம்.ஜி.ஆர் - சிவாஜி போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியதை தொடர்ந்து ரஜினி - கமல் காலகட்டம் தூள் கிளப்பி கொண்டு இருந்த வேளையில் மோகன், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களும் அவரவர்களின் பங்களிப்பை தமிழ் சினிமாவுக்கு மிக சிறப்பாக கொடுத்து வந்த காலகட்டத்தில் ஒரு விடலை பையனாக அரும்பு மீசையோடு சினிமா களத்தில் குதித்தவர் நடிகர் பிரசாந்த். இவர் சினிமா துறைக்கு வர வேண்டியவரே இல்லை. விதி அவரை ஒரு நடிகனாக்கிவிட்டது என அவரின் தந்தை தியாகராஜன் நடிகர் பிரசாந்தின் திரை பிரவேசம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். 



"பிரசாந்தை நான் நடிகனாக்க வேண்டும் என நினைக்கவே இல்லை. அவர் டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளை செய்து கொண்டு இருக்கும் போது சத்யராஜ் வந்து பார்த்தார். தியாகராஜன் இவ்வளவு நாள் கல்யாணமாகாத ஆள் மாதிரி இருந்தார். ஆனா அவருக்கு கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான் என பிரதாப் போத்தனிடம் போய் சொல்லிவிட்டார்.


அவர் வந்துய், உன்னோட பையனை கூப்பிடு நான் பாக்கணும் அப்படினு சொன்னார். பார்த்ததுக்கு அப்புறம் நான் 'டெய்சி' அப்படினு ஒரு படம் எடுக்குறேன் அதுக்கு பிரசாந்த் வேணும் அப்படின்னு கேட்டார். இல்ல நான் அவனை மெடிசின் படிக்க வைக்கணும் என சொல்லிவிட்டேன். இந்த நியூஸ் அப்படியே பல பேரிடம் போக ஒரு நாள் பாலுமகேந்திரா வந்து கேட்டாரு. அவர் கிட்டேயும் நான் பிரசாந்த் மெடிசின் படிக்கப்போறதை பத்தி சொல்லிட்டேன். அவரும் சரி பரவாயில்லை” என சொல்லிவிட்டார். 


 



மூணு மாசத்துல மெடிக்கல் காலேஜில் பிரசாந்த் சேரணும். அப்போ ஒருத்தர் வந்து எனக்கு 18 நாட்கள் தாங்க வேணும் என கேட்டார். சரின்னு சொல்லி பிரசாந்த் நடிச்ச படம் தான் "வைகாசி பொறந்தாச்சு". அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிச்சுது. சினிமாவுக்கு வரக்கூடாது, பிரசாந்தை டாக்டராக்கணும்னு நான் நினைச்சேன் ஆனா அவரை சினிமா தத்தெடுத்துகிச்சு. 


அதுக்கு அப்புறம் பாலுமகேந்திரா வந்து, நான் கேட்டபோது முடியாதுன்னு சொல்லிட்டியே, நான் என்ன தப்பு பண்ணேன் என கேட்டாரு. அப்படி வந்தது தான் "வண்ண வண்ண பூக்கள்" திரைப்படம். இப்படி தான் டாக்டராக வேண்டிய பிரசாந்த்தை டாப் ஸ்டாராக உருவாகி ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளிவிட்டார்.