இயக்குநர் சுதா கொங்குரா மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து கடந்த 2010ல் வெளியான துரோகி படத்தின் மூலம் தன்னை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திக் கொண்டார். படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அடுத்தடுத்து இறுதிச்சுற்று, சூரரை போற்று படங்களின் மூலம் தன்னை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக உயர்த்திக் கொண்டுள்ளார். சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. இந்தப் படம் கடந்த 2020ல் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. தொடர்ந்து புத்தம் புது காலை, பாவக்கதைகள் ஆகிய வெப் தொடர்களிலும் ஒரு படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா.



துரோகி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவதாக 6 ஆண்டுகள் கழித்து கடந்த 2016ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. ரித்திகா சிங் மற்றும் மாதவன் நடித்திருந்த இந்தப் படம் பல விருதுகளை பெற்றுத் தந்தது. சாதாரண குடும்பத்தில் இருந்து ஒரு இளம்பெண் எவ்வாறு குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெறுகிறார், அதற்கு பயிற்சியாளராக மாதவன் எவ்வாறு மெனக்கெடுக்கிறார் மற்றும் அவர்களுக்கிடையிலான காதல் என செல்லும் கதையுடன் சிறப்பான திரைக்கதையால் படம் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் படம் சரியாக போகாததால் இரண்டாவது திரைப்படத்திற்கு அவ்வளவு இடைவெளி விழுந்தது என்றும் அதில் அவர் சந்தித்த கஷ்டங்கள் குறித்தும் கூறியிருக்கிறார்.






அவர் சமீபத்தில் அந்த திரைப்படம் குறித்து வெளியாகும் முன் பலர் பேசிய வார்த்தைகளை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சந்திப்பில் "இவங்கல்லாம் ராயபுரத்த எப்படி படம் எடுக்க போறாங்க, இந்த பொண்ணுக்கு ராயபுரம் பத்தி என்ன தெரியும் என்று ஒரு இயக்குனர் பேசினார். இந்த படத்தில் மாதவன் கதாபாத்திரம் கூறுவதுபோல், 'நீயெல்லாம் வீட்ல உக்காந்து துணி துவைக்கதான் லாய்க்கு'ன்னு சொன்னாரு. 'கமெர்சியல் இல்ல, இது இங்க ஓடாது, இந்தில ஓடும், இந்தி கண்டெண்ட்' ன்னு சொன்னாங்க சில பேர். யார் இத முடிவு பண்றது இந்தி கண்டெண்ட், தமிழ் கண்டெண்ட், மலையாளம் கண்டெண்ட்ன்னு. 'பி, சி சென்டர்ஸ்ல சுத்தமா போகாது, ஏ சென்டர்ல போடலாம், அதுவும் மல்டிப்ளெக்ஸ்ல மட்டும்தான் நல்லா ஓடும், சத்தியம்ல போடலாம், நல்ல போகும்'ன்னு சொன்னாங்க" என்று படத்தை பற்றி முன்முடிவு செய்பவர்களை குறித்து பேசியிருக்கிறார். படம் ஓடாது என்றவர்களுக்கு பதிலடியாக படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது மீத வரலாறு.