நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், “மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை” என்று ‘லால் சலாம்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 






தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில்  விஷ்ணு விஷாலும் ஒருவர். நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். சின்ன சின்ன படங்கள் நடித்துவந்த அவர் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார். 2018-ஆம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ராட்சன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். 


முன்னதாக இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மோகன். இவர் கடந்த ஆண்டு, கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கிய கதை ஒன்றை தயாரிக்க வேண்டும் என தன்னுடைய கதையை லைகா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் லைகா நிறுவனத்திடம் இருந்து இவருக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் லைகா நிறுவனம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்தது. தன்னுடைய கதையில் ஃபுட்பால் விளையாட்டில் இரு நண்பர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தான் படத்தின் கதை என மோகன் தெரிவித்திருக்கும் நிலையில், அதே போன்ற கதை கதைக்களத்தை வைத்து கிரிக்கெட் விளையாட்டாக மாறுதல் செய்து இப்படத்தை ஐஸ்வர்யா இயக்குகிறாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பி இருந்தார் மோகன்.


இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தரப்பில் இருந்து, மோகனின் கதையை படித்துப் பார்த்துவிட்டு தன்னுடைய கதைக்கும், மோகன் எழுதிய கதைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று பதில் கொடுத்ததாக கூறப்படுகிறது. லால் சலாம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே அப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில்,  தற்போது லால் சலாம் படபிடிப்பு தளத்தில் இருந்து விஷ்ணு விஷால் செய்துள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.