நடிகர் கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில், நடிகர் மற்றும் நடிகைகளுக்கான ஏஜென்சி எதுவும் நடத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு:


இதுதொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை' வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்” என தெரிவித்துள்ளது.






ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்:


ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நடிகர் கமலால் 1981ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் பெரும்பாலும் கமல் நடிக்கும் படங்களை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறது. பிற நடிகர்களின் நடிப்பில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில சொற்ப படங்களை மட்டுமே தயாரித்து உள்ளது. 


தயாரிப்பில் தீவிரம்:


இந்நிலையில் விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் நடிகர் கமல் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். இதன் மூலம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ஒரு படத்தையும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறது. அதோடு, எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 233வது படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.


போலி செய்திகள்:


இந்நிலையில் தான், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படங்களுக்காக ஏஜெண்டுகள் மூலம் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனை மறுக்கும் விதமாக தான், ”தங்கள் நிறுவனம் சார்பில் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டு நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்யும் எந்த பணிகளையும் நாங்கள் செய்யவில்லை, இதுபோன்று வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என” ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.


ரஜினி பெயரில் மோசடி:


கடந்த 2016ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் மும்பையில் உள்ள பெனிசுலா டவர் பிசினஸ் பார்க் என்ற முகவரியில் போலி அறக்கட்டளை செயல்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், கமலின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோசடி நடைபெறுவதாக வெளியாகி உள்ள செய்தி திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.