சமந்தாவிற்கு மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த ஆண்டு தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு முழு வீச்சில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக அவர் செய்த ”ஊ சொல்றிய” பாடல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பட வாய்ப்புகள் வந்தது.
நடிகை சமந்தாவின் யசோதா திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் படம் அபாரம். குறிப்பாக வெளியாகி 10 நாட்களில் யசோதா படம் உலகம் முழுவதும் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யசோதாவின் வெற்றி சமந்தாவிற்கு மகிழ்ச்சியை தந்தாலும் படத்தின் வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். ஏனென்றால், அவருக்கு மயோசிடிஸ் என்ற அரிய நோய் உள்ளது. இப்படம் வெளியாவத்ற்கு முன், படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது நேர்காணல் ஒன்றில், தான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், தன் உடல்நிலை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்தது குறித்தும் மனமுடைந்து பேசியுள்ளார்.
“சில நாள்கள் நல்லபடியாக இருக்கும், சில நாள்கள் மோசமானவையாக இருக்கும். சில நாள்கள் படுக்கையில் இருந்து எழுவதே கடினமாக இருக்கும், சில நாள்கள் போராட வேண்டும் என்று நினைப்பேன். மெல்ல மெல்ல நான் போராட விரும்பும் நாள்கள், நான் பலவீனமாக நினைக்கும் நாட்களை விட அதிகமாகித்தான் வருகிறது” எனத் தெரிவித்தார்.
சமந்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து மனமுடைந்து பேசிய சமந்தா, "இப்போது மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. நான் விரைவில் இறக்கப்போவதில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக நிறைய கட்டுரைகளைப் பார்த்தேன். ஆம் இதிலிருந்து குணமாக நேரம் எடுக்கும். நான் சோர்வாக உணர்கிறேன் ஆனால் போராடியே வந்திருக்கிறேன், இதனை எதிர்த்து போராடப் போகிறேன். நான் இவ்வளவு தூரம் போராடி வந்திருக்கேனான்னு தோணுது. ஆனா நான் போராடிதான் ஆகணும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று மாதங்கள் மிகவும் இருண்ட காலமாக இருந்ததாகக் கூறியுள்ள சமந்தா, தான் அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதாகவும், மருத்துவர்களை தொடர்ந்து அணுகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“வாழ்க்கையில எல்லாவற்றையும் குறித்து நான் பேசியே வந்திருக்கிறேன். நான் நாகரீகமான உடைகள், அசாதாரணமான போட்டோஷூட் செய்த வாழ்க்கைமுறையை காண்பித்திருக்கும் நிலையில், இந்த க்ளாமர் அல்லாத பக்கத்தையும் காண்பிக்க நினைத்தேன். அனைவருக்கும் நல்ல காலம், மோசமான நேரங்கள் வரும் என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் பணக்காரராக இருந்தாலும் சரி, பிரபலமாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் மோசமான நேரங்கள் இருக்கும். அதை அனைவரும் அறிவது முக்கியம் ," எனத் தெரிவித்துள்ளார்.
அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சாம் தரப்பில் இந்த கருத்து தவறானது என்றும், அவர் ஹைதராபாத்தில் அவரது வீட்டில் இருப்பதாக தெரிவித்தனர்.